சென்னை: மலேசியா, தாய்லாந்து நாடுகளில் இருந்து விமானங்களில் சென்னைக்கு கொடிய விஷ பாம்புகள் உள்பட 49 அரிய வகை உயிரினங்கள் கடத்தி வந்த ஒருவரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா பயணிகள் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்கத்துறை ஏர் இன்டெலிஜென்ட் அதிகாரிகள் ரகசியமாக கண்காணித்தனர். அப்போது சென்னையைச் சேர்ந்த சுமார் 30 வயது ஆண் பயணி, சுற்றுலா விசாவில் மலேசியாவுக்கு சென்று விட்டு திரும்பி வந்தார். அவர் மீது ஏர் இன்டெலிஜென்ட் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை நிறுத்தி அவருடைய உடைமைகளை சோதித்தனர். அவர் வைத்திருந்த பெரிய சூட்கேஸ் மற்றும் கூடைகளை சோதனை செய்தனர்.
அப்போது உடைமைகளுக்குள் கொடிய விஷம் உடைய நாகப் பாம்புகள், ராஜ நாகங்கள் போன்ற 34 உயிரினங்கள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதில், கொடிய விஷம் உடைய 6 நல்ல பாம்புகள், வட அமெரிக்கா வனப்பகுதியில் உள்ள கலிபோர்னியா ராஜ நாகங்கள் 8, சிவப்பு சுருட்டைப் பாம்பு 1, இந்தோனேசியா நீல நாக்கு பாம்புகள் 2, சதுப்பு நிலப் பாம்புகள் 2, நீர் உடும்புகள் 10 என மொத்தம் 34 கொடிய விஷமுடைய அபூர்வ வகை வெளிநாட்டு உயிரினங்கள் இருந்தன. அவைகளை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்து, கடத்தல் பயணியை கைது செய்தனர்.
இதேபோல், தாய்லாந்து நாட்டிலிருந்து தாய் ஏர்வேஸ் பயணிகள் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று முன்தினம் நள்ளிரவில் வந்தது. அதில் வந்த பயணிகள் அனைவரும் வெளியில் சென்ற பின்பு, கன்வேயர் பெல்டில் ஒரே ஒரு சூட்கேஸ் மட்டும் கேட்பாரற்று கிடந்தது. சுங்க அதிகாரிகள் அந்த சூட்கேஸை திறந்து பார்த்தபோது, மஞ்சள் மற்றும் வெள்ளை நிறங்களில் அபூர்வ குரங்குகள், இந்திய பனை அணில், விஷம் உடைய சிலந்திப் பூச்சிகள் என மொத்தம் 15 அபூர்வ வகை உயிரினங்கள் இருந்தன.
இந்த உயிரினங்களை கடத்திக் கொண்டு வந்த ஆசாமி, சுங்க அதிகாரிகளின், கெடுபிடி சோதனைகளை பார்த்து, பயந்து அரிய வகை உயிரினங்கள் இருந்த சூட்கேஸை எடுக்காமலேயே தப்பி ஓடியது தெரியவந்தது. இதுதொடர்பாக, சுங்கத்துறை அதிகாரிகள் வழக்கு பதிந்து சிசிடிவி கேமரா காட்சிகள் மூலம் தப்பி ஓடிய பயனியை தேடி வருகின்றனர். பிறகு 49 அபூர்வ வகை உயிரினங்கள் அனைத்தையும், ஏர் ஏசியா மற்றும் தாய் ஏர்லைன்ஸ் விமானங்கள் மூலம் அந்தந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டன.
