நாகர்கோவில் அருகே பரபரப்பு; இளம்பெண் எரித்துக்கொலை: யார் அவர்? மாயமான மாணவிகள் குறித்து விசாரணை

 

திங்கள்சந்தை: நாகர்கோவில் சுங்கான்கடையில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரி அருகே ஆள் நடமாட்டம் இல்லாத புதர் நிறைந்த பகுதியில் எரிந்த நிலையில் எலும்பு கூடாக இளம்பெண் உடல் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாகர்கோவில் அருகே சுங்கான்கடை அம்பேத்கார் நகரை தாண்டி ஒதுக்குப்புறத்தில் புதர்கள் மண்டி கிடக்கிறது. இந்த பகுதியில் மனித எலும்பு கூடு எரிந்த நிலையில் கிடப்பதாக இரணியல் போலீசாருக்கு நள்ளிரவு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். தொடர்ந்து அங்கு கிடந்த உடலை போலீசார் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது உடல் முழுவதும் எரிந்த நிலையில் வெறும் எலும்பு கூடுகள் மட்டுமே கிடந்தது. உடல் திமிறி எழாதவாறு மெல்லிய கம்பியால் சுற்றி கட்டப்பட்டு எரித்து இருந்ததும் தெரிய வந்தது. எலும்புக்கூட்டில் நீண்ட தலை முடி கருகிய நிலையிலும், அருகே ஹேர்பின், பெண்கள் அணியும் உள்ளாடை, சேலை ஆகியவை எரிந்த நிலையிலும் காணப்பட்டது.

இதனால் எரிந்து எலும்புக் கூடாக கிடந்தது சுமார் 20 வயது மதிக்கதக்க இளம்பெண் என்பது தெரியவந்துள்ளது. இந்த இளம்பெண் யார்? எந்த ஊர்? என்பது உள்பட எந்த தகவலும் போலீசாருக்கு உடனே கிடைக்கவில்லை. சுங்கான்கடை பகுதியில் தனியார் நர்சிங் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி, மகளிர் கலை அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரி என்று ஏராளமான கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் மாணவர் மற்றும் மாணவிகள் விடுதிகளும் அதிக அளவில் உள்ளன. இதனால் கல்லூரி மாணவிகள் யாராவது காணாமல் போய் இருக்கிறார்களா? என்று போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். அதே போன்று சமீபத்தில் குமரி மாவட்டத்தில் காணாமல் போன இளம்பெண்கள் குறித்து பதிவான வழக்குகள் குறித்த தகவல்களையும் போலீசார் சேகரித்து வருகின்றனர். கொலையான இளம்பெண்ணின் உடலில் இருந்து தங்க செயின் ஒன்றை போலீசார் கண்டெடுத்துள்ளனர். இதன் மூலம் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

3 மாதங்கள் ஆகியிருக்கலாம்
இளம்பெண்ணின் உடல் கிடந்த இடம் ஆள் நடமாட்டம் இல்லாத புதர் மண்டிய பகுதியாகும். ஆங்காங்கே தண்ணீர் நிரம்பிய குட்டைகள் உள்ளன. மர்ம நபர்கள் உடலை எரித்த போது விடிய தொடங்கி இருக்கலாம் என்று தெரிகிறது. இதனால் அவசரம் அவசரமாக எரிந்த உடலை உருட்டி அந்த பகுதியில் உள்ள ஒரு குட்டையில் தள்ளி இருந்ததும் தெரியவந்துள்ளது. கொலை நடந்து சுமார் 3 மாதமாவது இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

போலீஸ் அவசரம்
இளம்பெண் எலும்பு கூடாக கிடக்கும் தகவல் அறிந்ததும் செய்தியாளர்கள் அந்த பகுதிக்கு படம் பிடிக்கச் சென்றனர். இதைப் பார்த்த போலீசார் அவர்களை தடுத்தனர். மேலும் அவசர அவசரமாக உடலை மீட்டு ஆம்புலன்ஸில் ஏற்றி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டனர். இதற்கிடையே நள்ளிரவு நேரம் என்பதால் செய்தியாளர்கள் படம் பிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது. உடனே உள்ளூர் மக்களிடம் இருந்த டார்ச் லைட்டை வாங்கி தூரத்திலிருந்து வெளிச்சம் அடித்து படம் பிடித்தனர்.

Related Stories: