சென்னை: தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து, பயணிகள் விமானம் ஒன்று, நேற்று முன்தினம் நள்ளிரவு சென்னை வந்தது. விமானத்தில் வந்த பயணிகளை, விமான நிலைய சங்கத்துறை ஏர் இன்டெலிஜெண்ட் அதிகாரிகள் கண்காணித்தனர். குறிப்பாக, சுற்றுலா பயணிகள் விசாவில் தாய்லாந்துக்கு போய்விட்டு, உடனே திரும்பி வரும் பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர்.
அப்போது, சென்னையைச் சேர்ந்த சுமார் 30 வயது இளைஞர், தாய்லாந்து சுற்றுலா பயணியாக சென்று விட்டு, மறுநாளே, தாய்லாந்தில் இருந்து விமானத்தில் திரும்பி வந்தவர் மீது சுங்கத்துறை ஏர் இன்டெலிஜென்ட் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அந்த பயணியை நிறுத்தி விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசினார். இதையடுத்து, அதிகாரிகள் அந்த தனி அறைக்கு அழைத்துச் சென்று உடமைகளை சோதனை செய்தனர். அப்போது சூட்கேசின் உள்ளே அபூர்வ வகை வன உயிரினங்கள் இருந்ததை கண்டுபிடித்தனர்.
அதில், ஆப்பிரிக்க கண்டம் மற்றும் சகாரா பாலைவனம் பகுதிகளில் மட்டும் காணப்படும் அழிந்து வரும் அபூர்வ வகை சல்கட்டா ஆமைகள் 9, ஊர்வன வகையைச் சேர்ந்த தென் அமெரிக்கா மற்றும் கரிபிய தீவுகளிள் காணப்படும் அபூர்வ வகை பல்லிகள் 4, ஈஸ்டன் வாட்டர் டிராகன் எனப்படும் கிழக்கு ஆஸ்திரிலேயா பகுதியில் வசிக்கக்கூடிய அபூர்வ வகை உயிரினம் 1, ராயல் பைத்தான் என்று அழைக்கப்படும் பந்து போல் சுருளக் கூடிய ஆப்பிரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட விஷமற்ற மலைப்பாம்புகள் 12, ஆப்பிரிக்க வனப்பகுதியில் வசிக்கக்கூடிய அல்பைனோ கார்ன் கருப்பு நிற சிவப்பு கண்கள் உடைய விஷமற்ற பாம்பு 1, நீல நாக்கு உடைய ஆஸ்திரேலியா இனமான பல்லி போன்ற உடும்பு வகைகளைச் சேர்ந்த அபூர்வ விலங்குகள் 3, கொடிய விஷம் வாய்ந்த நாகப் பாம்புகளை பிடித்து, உணவாக உட்கொள்ளும் வெள்ளை நிற அரசை பாம்பு எனப்படும் ஒயிட்சைட் கிங் ஸ்னேக் 1 இருந்தது.
இது இந்தியாவில் தமிழ்நாட்டில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் நீலகிரி மாவட்டம் ஆகிய இடங்களில் அபூர்வமாக, காணப்பட்டாலும், ஆப்பிரிக்கா வட அமெரிக்கா போன்ற பகுதிகளிலும் ஒன்றிரண்டு மட்டும் வசிக்கின்றன. இதனால் இது அழிந்து வரும் அபூர்வ வகை பாம்பு ஆகும். இதில், மொத்தம் 31 வகையான அபூர்வ வகை உயிரினங்கள் இருந்தன.
இவைகள் அனைத்தும் உயிருடன், ஊர்ந்து கொண்டு இருந்ததால், அதிகாரிகள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். அதோடு அந்த சூட்கேசில், உயிரினங்கள் சுவாசிக்க காற்று செல்லக்கூடிய விதத்தில், சிறிய சிறிய துவாரங்களும் போடப்பட்டிருந்தன. இதையடுத்து, அபூர்க வகை உயிரினங்களை கடத்திய நபரை கைது செய்தனர். இதுதொடர்பாக விசாரித்ததில், முறையான மருத்துவ பரிசோதனை, சர்வதேச வனவிலங்குகள் பாதுகாப்பு துறை அனுமதியின்றி சட்ட விரோதமாக கடத்தப்பட்டது தெரியவந்தது.
