தூத்துக்குடி, பிப். 11: தூத்துக்குடியில் முதியவரை பணம் கேட்டு மிரட்டி கத்தியால் குத்திய இருவரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கொம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் மைக்கேல் ராஜ் (65). இவர், கடந்த சில ஆண்டுகளாக குடும்பத்தை பிரிந்து, தூத்துக்குடி ராஜாஜி பூங்கா பகுதியில் தங்கியிருந்து யாசகம் பெற்று பிழைப்பு நடத்தி வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு மைக்கேல் ராஜ், தூத்துக்குடி அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவு வாயில் அருகே தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த அடையாளம் தெரியாத இருவர், மைக்கேல் ராஜை எழுப்பி பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். அவர் தன்னிடம் பணம் இல்லை என்று கூறவே, ஆத்திரமடைந்த இருவரும், தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் மைக்கேல் ராஜை குத்திவிட்டு தப்பியோடினர். படுகாயமடைந்த மைக்கேல் ராஜ் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து தகவலறிந்த தென்பாகம் போலீசார், கொலை முயற்சி வழக்கு பதிந்து சந்தேகத்தின் பேரில் இருவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
