பொன்னேரி, பிப்.13: பொன்னேரி அருகே, ஏ.ரெட்டிபாளையம் கிராமத்தில் கடந்த 10 நாட்களாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை கண்டித்து, காலி குடங்களுடன் பெண்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பொன்னேரி அடுத்துள்ள ஏ.ரெட்டிபாளையம் கிராமத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள நீர்த்தேக்க தொட்டி கடந்த 10 வருடங்களுக்கு முன் கட்டப்பட்டது. இதில், பழுது ஏற்பட்டதால் 2024-25ம் ஆண்டிற்கான பதினைந்தாவது நிதி குழு மானிய திட்டத்தில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு 3 லட்சத்து 87 ஆயிரத்து 197 ரூபாய் மதிப்பீட்டில் பழுதுபார்த்தல் மற்றும் பென்சிங் அமைத்தல் பணிகள் நடைபெற்றது. ஆனால், இதில் தண்ணீர் ஏற்றாமல் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்படாமல் இருந்து வந்துள்ளது. மழைக்காலம் என்பதால் தண்ணீர் தேவை பெரிதளவு தேவை இல்லாத காரணத்தினால் இதனை பொதுமக்கள் கண்டு கொள்ளாமல் இருந்துள்ளனர்.
தற்போது, கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், கடந்த 10 தினங்களாக இந்த குடும்பங்களுக்கு குடிநீர் வழங்கப்படாததால் தண்ணீருக்கு பெரும் அவதி அடைந்துள்ளனர். பலமுறை இதுகுறித்து அரசுத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தும் காசுக்கு தண்ணீர் வழங்குவதாக கூறியுள்ளனர். ஆனால், தங்களுக்கு தற்காலிகமாக வழங்கப்படும் டிராக்டர் தண்ணீர் வேண்டாம், நிரந்தரமாக குடிநீர் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் எனக் கூறி, பொன்னேரி-காட்டூர் நெடுஞ்சாலையில் காலி குடங்களுடன் அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலர் குணசேகரன் தலைமையிலான அதிகாரிகளும், காட்டூர் காவல்துறையினரும் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். ஆனாலும், தங்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்க வேண்டும் எனவும் உடனடியாக இந்த பிரச்னைக்கு தீர்வு கிடைக்கவில்லை என்றால் மீண்டும் சாலை மறியல் செய்வதாக அவர்கள் கூறினர்.
