செய்யாறு, பிப்.13: செய்யாறு அருகே டிராக்டர் கவிந்து விபத்துக்குள்ளானதில், காயமடைந்த 10 பெண்களை எம்எல்ஏ நேரில் சென்று ஆறுதல் கூறினார். செய்யாறு அடுத்த நாவல் மற்றும் கழனிப்பாக்கம் கிராமங்களை சேர்ந்த வேண்டா, உஷா, குணசுந்தரி, மங்கை, வசந்தா, லட்சுமி, பாக்கியம், உண்ணாமலை, அமுதா உள்பட 10 பெண்கள் வடுக்கப்பட்டு கிராமத்திற்கு, டிராக்டரில் நாற்று நட நேற்று காலை சென்றனர். அப்போது வடுகப்பட்டு கிராமத்தின் அருகே சென்றபோது, எதிர்பாராத விதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் விபத்துக்குள்ளானது. இதில் 10 பெண்களுக்கு காயம் ஏற்பட்டது. இதைப்பார்த்த அப்பகுதியினர், காயமடைந்தவர்களை மீட்டு செய்யாறு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைகாக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த செய்யாறு எம்எல்ஏ ஒ.ஜோதி மருத்துவமனைக்கு சென்று காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த பெண்களை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் மருத்துவர்களிடம் உரிய சிகிச்சை அளிக்க ஆலோசனைகளை வழங்கினார். அப்போது செய்யாறு கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆ.ஞானவேல், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் ராம் ரவி, மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை தலைவர் மோ.ரவி, அரசு வழக்கறிஞர் ஜான்பாஷா, மாவட்ட பிரதிநிதி ஆறுமுகம், நகர துணை செயலாளர் சதீஷ், கிளை நிர்வாகிகள் துளசி மணி, தாண்டவராயன், மாரியப்பன் ஆகியோர் உடனிருந்தனர்.
