வேலூர், பிப்.13: வேலூர் மாவட்டத்தில் குறைபாடுகள் கண்டறியப்பட்ட 5 கடைகளில் உரம் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு உரங்கள் தடையின்றி கிடைக்கும் வகையில் இறக்குமதி செய்யப்பட்டு, தனியார் மற்றும் கூட்டுறவு உரம் விற்பனை நிலையங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், மாவட்டத்தில் உள்ள உரக்கடைகளில் உர தட்டுப்பாடு உள்ளதாக விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் தெரிவித்தனர். இதையடுத்து, வேளாண்மை உதவி இயக்குநர் தரக்கட்டுப்பாடு ராகினி மற்றும் வேளாண் துறையினர் திடீரென ஆய்வு செய்தனர்.
ஆய்வின்போது, சில தனியார் உர விற்பனையாளர்கள் உரங்களின் இருப்பு விவரம் முறையாக பராமரிக்கப்படாமல், சேமிப்பு கிடங்கு அனுமதி பெறாமல் உரங்களை இருப்பு வைத்து வந்தது, உரங்களின் இருப்பு மற்றும் விலை விவரங்களை கடையின் முன் விவசாயிகளுக்கு பார்வையில் தெரியும்படி எழுதி பராமரிக்காமல் இருந்தது போன்ற குறைபாடுகள் கண்டறியப்பட்டது. அவ்வாறு குறைகள் கண்டறியப்பட்ட 5 கடைகளுக்கு உரம் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டு, விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளது.
இதுகுறித்து வேளாண் அதிகாரிகள் கூறியதாவது: வேலூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு யூரியா தட்டுப்பாடின்றி கிடைக்க பொதுமான அளவு அனைத்து விற்பனை நிலையங்களிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் நடப்பு பருவத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல் பயிருக்கு தேவையான யூரியா, டிஏபி பொட்டாஷ், காம்ப்ளக்ஸ் ஆகிய உரங்கள் 6,800 டன் இருப்பில் உள்ளது. எனவே அனைத்து உர விற்பனையாளர்கள் அனைத்து நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கும் சாகுபடி பரப்புக்கு ஏற்றவாறு யூரியா வழங்க வேண்டும்.
யூரியாவை நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக விற்க கூடாது. யூரியாவுடன் பிற உரங்களை வாங்க விவசாயிகளை கட்டாயப்படுத்தக்கூடாது. தினசரி பிஓஎஸ் கருவி மூலம் விவசாயிகளின் ஆதார் எண் பெற்று உரங்களை பட்டியலிட்டு ரசீது வழங்க வேண்டும். உரங்களின் இருப்பு மற்றும் விலை விவரங்களை பார்வையில் தெரியும்படி எழுதி வைக்க வேண்டும். பிஓஎஸ் கருவியில் உள்ள இருப்பும், கிடங்கில் உள்ள இருப்பும் சரியாக இருக்க வேண்டும். ஆய்வின்போது இருப்பு வேறுபாடு கண்டறியபட்டால் கடையின் உரிமம் ரத்து செய்யப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
