கொருக்குப்பேட்டை மணலி சாலையில் ரூ.96.04 கோடியில் ரயில்வே மேம்பாலம்

தண்டையார்பேட்டை, பிப்.13: கொருக்குப்பேட்டை மணலி சாலையில் ரூ.96.04 கோடியில் கட்டப்பட்ட ரயில்வே மேம்பாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். கொருக்குப்பேட்டை, மணலி சாலையில் ரயில்வே சந்திப்பில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த கொருக்குப்பேட்டை, மணலி சாலை மற்றும் எண்ணூர் நெடுஞ்சாலையில் உள்ள ரயில்வே 2பி மற்றும் 2ஏ ரயில்வே கேட்களில் தொடர் இடைவெளிகளில் ரயில் போக்குவரத்துக்கு ஏதுவாக சுமார் 42 ஆயிரம் வாகனங்களின் போக்குவரத்து நிறுத்தம் செய்யப்படுகிறது. இதனால் இவ்விரு ரயில்வே கேட்களையும் வாகனங்களும், பொதுமக்களும் கடப்பதற்கு நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை இருந்தது. இதனால், காலை, மாலை நேரங்களில் மாணவர்கள், வேலைக்கு செல்வோர், நோயாளிகள் அவதிக்குள்ளாகினர்.

இதன் காரணமாக இப்பகுதி மக்களின் 40 ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்றி, பொதுமக்களின் சிரமத்தை போக்கும் வகையிலும், காலை நேரம் மற்றும் எரிபொருள் சேமிப்பை கருத்தில் கொண்டும் இந்த ரயில்வே கேட்களுக்கு மாற்றாக மணலி சாலை மற்றும் எண்ணூர் நெடுஞ்சாலையில் மேம்பாலங்கள் அமைக்க திட்டமிடப்பட்டது. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் 2022-23ம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில், கொருக்குப்பேட்டையில் உள்ள மணலி சாலையில் 2பி ரயில்வே கேட்டில் புதிய மேம்பாலம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, தண்டையார்பேட்டை மண்டலம், கொருக்குப்பேட்டை, மணலி சாலை ரயில்வே கேட்டில் உட்கட்டமைப்பு மற்றும் வசதிகள் நிதியின் கீழ் ரூ.96.04 கோடியில் புதிய பாலம் கட்டப்பட்டது.

இதை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து, வாகனத்தில் பயணம் செய்தார். இந்த மேம்பாலத்தின் நீளம் 840 மீட்டர் (ரயில்வே பகுதி நீளம் 72 மீட்டர் உள்பட), அகலம் 8.40 மீட்டர் மற்றும் மேம்பாலத்தின் இரு புறங்களிலும் சேவை சாலையின் அகலம் 5 மீட்டர். இந்த பாலத்தால் கொடுங்கையூர், கொருக்குப்பேட்டை, தண்டையார்பேட்டை, எழில் நகர், கண்ணதாசன் நகர் மற்றும் நேரு நகர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் சுமார் 1 லட்சம் மக்கள் பயனடைவர். இதை தொடர்ந்து, எண்ணூர் நெடுஞ்சாலையில் உள்ள ரயில்வே கேட் பகுதியில் (எண் 2), உட்கட்டமைப்பு மற்றும் வசதிகள் நிதியின் கீழ் ரூ.75 கோடியில் கட்டப்படவுள்ள புதிய மேம்பாலத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

அதேபோல், தண்டையார்பேட்டை மண்டலம், கொருக்குப்பேட்டை மணலி சாலையில் புதிய பாலத்திற்கு அருகில் அமைக்கப்படவுள்ள பூங்கா ரூ.1.10 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ளது. இந்த பூங்கா 19.128 சதுர அடி பரப்பளவு கொண்டது. பூங்காவில் பசுமைத் தாவரங்கள், சுற்றிலும் நடை பயிற்சிக்கான பாதை, அமரும் இருக்கைகள், மின்விளக்குகள் உள்ளிட்ட வசதிகளுடன் அமைக்கப்படுகிறது. இந்நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர்கள் கே.என்.நேரு, பி.கே.சேகர்பாபு, மேயர் பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆர்.டி.சேகர், எபிநேசர், ஐட்ரீம் மூர்த்தி, துணை மேயர் மு.மகேஷ்குமார், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் கார்த்திகேயன், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன். சென்னை குடிநீர் வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் டி.ஜி.வினய், பெருநகர சென்னை மாநகராட்சி வடக்கு வட்டார துணை ஆணையர் கட்டா ரவி தேஜா, மண்டல குழு தலைவர் நேதாஜி கணேசன், பகுதி செயலாளர் ஜெபதாஸ் பாண்டியன், லட்சுமணன், வழக்கறிஞர் மருது கணேஷ் மற்றும் அரசு அலுவலர்கள், திமுகவினர் கலந்துகொண்டனர்.

Related Stories: