தாய்லாந்து, காஷ்மீர் டூர் பேக்கேஜ் என ரூ.16 லட்சம் மோசடியில் ஈடுபட்ட டிராவல்ஸ் உரிமையாளர் கைது

சென்னை, பிப்.13: தாய்லாந்து டூர் பேக்கேஜ் என ரூ.16 லட்சம் பெற்று மோசடி செய்த டிராவல்ஸ் நிறுவன உரிமையாளரை பாதிக்கப்பட்டவர்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். மதுரை மாவட்டம் கோரிப்பாளையத்தை சேர்ந்தவர் தமிவேந்தன் (23). இவர் சென்னை அண்ணாசாலையில் உள்ள ‘ட்ரீப் ஹாலிடேஸ்’ என்ற பெயரில் செயல்படும் டிராவல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ராஜாதுரை என்பவரை அனுகியுள்ளார். அவரிடம், நாங்கள் 12 பேர் தாய்லாந்து செல்ல உள்ளோம். அதற்கு டூர் பேக்கேஜ் இருக்கிறதா என்று கேட்டுள்ளார். அதற்கு அவர், ரூ.7.5 லட்சம் செலவாகும், என்று கூறினார்.

அதன்படி ராஜாதுரை அனுப்பிய லிங்க் மூலம் ரூ.7,42,412 மற்றும் நேரடியாக ரூ.17 ஆயிரத்தை கொடுத்துள்ளனர். பின்னர் 12 பேரும் கடந்த 28ம் தேதி சென்னை விமான நிலையம் வந்து தாய்லாந்துக்கு அழைத்து செல்லும் ராஜதுரைக்காக காத்திருந்த போது, அவர் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. பிறகு விசாரித்த போது, அவர் தலைமறைவானது தெரியவந்தது. இதனால் பதிக்கப்பட்ட 12 பேரும் கடந்த 29ம் தேதி ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் நடந்த சம்பவம் குறித்து ராஜாதுரை மீது புகார் அளித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இதற்கிடையே பெரும்பாக்கத்தை சேர்ந்த சுரேஷ் (29) என்பவர், ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் ராஜா துரை மீது புகார் அளித்தார். அதில், காஷ்மீர் அழைத்து செல்வதாக 49 பேரிடம் விமான டிக்கெட்க்கு தலா ரூ.18,299 பணம் என மொத்தம் ரூ.8,89,407 கொடுத்தேன். ஆனால் சொன்னபடி விமான டிக்கெட் எடுத்து கொடுக்காமல் ஏமாற்றியுள்ளார். இதனால் அனைவருக்கும் நான், ரூ.5 லட்சம் செலவு செய்து விமான டிக்கெட் வாங்கி காஷ்மீருக்கு அனுப்பினேன். எனவே, மோசடியில் ஈடுபட்ட ராஜா துரை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்தார். இந்நிலையில் பணம் கொடுத்து பாதிக்கப்பட்டவர்கள் நேற்று முன்தினம் இரவு டிராவல்ஸ் நிறுவனத்திற்கு சென்று பார்த்த போது, அங்கு ராஜா துரை இருந்தது தெரியவந்தது. உடனே பாதிக்கப்பட்ட அனைவரும் ஒன்று கூடி ராஜா துரையை பிடித்து தாக்க முயன்றனர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ராஜா துரையை அவர்களிடம் இருந்து மீட்டனர். பின்னர் டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர் ராஜா துரை மீது போலீசார் தனித்தனியாக 2 வழக்குகள் பதிவு செய்து கைது செய்தனர்.

Related Stories: