விஷம் கலந்த கேக் சாப்பிட்ட விவகாரம் கணவன், மகன் உயிரிழந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மனைவியும் பலி

பெரம்பூர், பிப்.13: பெரம்பூர் சங்கர மடம் தெருவை சேர்ந்தவர் சகாய செபஸ்டின் (43), தனியார் கம்பெனியில் கணக்காளராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி ரெக்ஸி பியூலா (38). இவர்களது மகள் இவாஞ்சலின் அல்வினா (8), மகன் யுவான் ஆண்டோ (4). இவர்களது சொந்த ஊர் விருதாச்சலம். இந்நிலையில், சகாய செபஸ்டின் மனைவி ரெக்சி பியூலாவுக்கு புற்றுநோய் பாதித்து அதிதிவிர சிகிச்சை பெற்று வந்துள்ளார். புற்றுநோய் பாதித்த தனது மனைவி இறந்துவிடுவார் என்று எண்ணிய சகாய செபஸ்டின் மிகுந்த மன உளைச்சலுடன் இருந்துள்ளார். இதனால் மனவேதனை அடைந்த சகாய செபஸ்டின், குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தார்.

அதன்படி, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சகாய செபஸ்டின் வீட்டிற்கு கேக் வாங்கி வந்தார். அதில், விஷத்தை கலந்து மனைவி, மகள் மற்றும் மகனுக்கு கொடுத்தார். சிறிது நேரத்தில் மூவரும் மயங்கிய நிலையில், சகாய செபஸ்டின் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனிடையே, மயக்க நிலையில் இருந்த ரெக்ஸி பியூலா காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற செம்பியம் போலீசார், மயங்கிக்கிடந்த யுவான் ஆண்டோ, இவாஞ்சலின் அல்வினா, ரெக்ஸி பியூலா ஆகியோரை மீட்டு பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சகாய செபஸ்டின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.

டாக்டர்கள் குழுவினர் பரிசோதனை செய்தபோது, சிறுவன் யுவான் ஆண்டோ ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். சிறுமி இவாஞ்சலின் அல்வினாவுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து காப்பாற்றினர். இதனிடையே, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட ரெக்ஸி பியூலா நேற்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். அதில், புற்றுநோய் தீவிரத்தின் இறுதி கட்டத்தில் இருந்த மனைவி உயிரிழந்து விட்டால் என்ன செய்வது என்ற கவலையிலும், மனைவிக்கு கடைசி நேரத்தில் லட்சக்கணக்கில் செலவு செய்து வைத்தியம் பார்க்க முடியவில்லை என்ற மன வருத்தத்திலும் சகாய செபஸ்டின் இந்த முடிவை எடுத்திருப்பது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து செம்பியம் போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர். தந்தை, தாய், தம்பி ஆகியோரை இழந்து தவிக்கும் சிறுமியின் நிலையைக் கண்டு அப்பகுதி மக்கள் சோகத்தை மூழ்கியுள்ளனர்.

Related Stories: