புதுச்சேரி, பிப். 13: புதுச்சேரி வில்லியனூர் அருகே தனியார் பொறியியல் கல்லூரியின் முதல்வராக குருலிங்கம் பணியாற்றி வருகிறார். அதே கல்லூரியில் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலை சேர்ந்த விஜயபாபு என்பவர் உதவி பேராசிரியராகவும், காசாளராகவும் பணியாற்றி வந்தார். இதனிடையே, விஜயபாபு கடந்தாண்டு நவம்பர் மாதம் நிர்வாக அதிகாரி பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டார். அப்போது விஜயபாபுவிடம், அனைத்து பதிவுகள் மற்றும் இஆர்பி தகவல்களை ஒப்படைக்குமாறு கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டது. ஆனால், அவர் எதையும் ஒப்படைக்காமல் பணிக்கு வராமல் இருந்துள்ளார். தொடர்ந்து, நிர்வாகம் அனைத்து பதிவுகள், இஆர்பி தகவல்களை பார்த்தபோது, போலியாக பில்கள் உருவாக்கி மாணவர்களின் பணத்தை கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் அக்டோபர் வரை சுமார் ரூ.37.48 லட்சம் கையாடல் செய்து இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக கல்லூரி முதல்வர் குருலிங்கம், மங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் விஜயபாபு மீது போலீசார் வழக்கு பதிந்து அவரை தேடி வருகின்றனர்.
