ஒன்றிய அரசை கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்கள் ரயில் மறியல் போராட்டம்

காஞ்சிபுரம், பிப்.13: காஞ்சிபுரம் பழைய ரயிவே நிலையம் அருகே ஒன்றிய அரசை கண்டித்து, அனைத்து தொழிற்சங்கங்கள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. தொழிலாளர் உரிமைகளை பறிக்கும் 4 புதிய சட்டங்களை ஒன்றிய அரசு திரும்பப்பெற வலியுறுத்தி, அனைத்து தொழிற்சங்கங்கள், அகில இந்திய வேலை நிறுத்த போராட்டத்திலும், மாநிலம் தழுவிய ரயில் மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் ஐஎன்டியூசி, ஏஐடியூசி, சிஐடியூ, தெமுச, எச்எம்எஸ், ஏஐசிசிடியூ, ஏஐயூடியூசி, தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மையம் (டியூசிசி), ஐக்கிய தொழிற்சங்க காங்கிரஸ் உள்ளிட்ட தொழிற்சங்கள் சார்பில், காஞ்சிபுரம் பழைய ரயிவே நிலையம் அருகே ரயில் மறியல் போராட்டம் நேற்று நடைபெற்றது.

தொமுச மாவட்ட தலைவர் இளங்கோவன் தலைமை தாங்கினார். சிஐடியு தர், மாநில துணை பொதுச்செயலாளர் முத்துக்குமார், அகில இந்திய தொமுச பேரவை துணை தலைவர் பொண்ணு ராம், எஏஐடியுசி மாவட்ட செயலாளர் மூர்த்தி, ஐஎன்சிசிடியு மாவட்ட தலைவர் ஆப்ரகாம், நிர்வாகிகள் சுந்தரவதனம், கே.ரவி, வெங்கடேசன், அரசு உள்ளிட்ட 800க்கும் மேற்பட்ட தொழிற்சங்கத்தினர் பங்கேற்று, கடற்கரை- திருமால்பூர் வரை செல்லும் மின்சார ரயிலை மறித்து, கண்டன கோஷங்களை எழுப்பியவாரு ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து, தகவலறிந்ததும் விரைந்து வந்த போலீசாருக்கும், போராட்டகாரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளும், வாக்குவாதங்களும் ஏற்பட்டது. இதனால், ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை, போலீசார் கைது செய்து, தனியார் திருமண மனடபத்தில் அடைத்து வைத்தனர். ரயில் மறியல் காரணமாக பழைய ரயில்வே நிலையம் அமைந்துள்ள சாலையில் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டு, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
*திருப்போரூர் ரவுண்டானா அருகே நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் கனல்விழி தலைமை தாங்கினார்.

மார்க்சிய கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் செல்வம், மதிமுக மாவட்ட செயலாளர் லோகநாதன், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட துணை தலைவர் ஜெகதீசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ரவுண்டானா அருகே இருந்து ஒன்றிய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியபடி 100க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக வந்து, பேருந்து நிலையம் அருகில் ஓ.எம்.ஆர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் அனைவரையும் திருப்போரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாங்கம், எஸ்.ஐ கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் கைது செய்து, தனியார் மண்டபத்தில் வைத்தனர். பின்னர், மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

 தொழிலாளர் விவசாயிகள் விரோத சட்டங்களை திரும்ப பெறக் கோரி அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் செங்கல்பட்டு மாவட்டத்தில் செங்கல்பட்டு, திருப்போரூர், மதுராந்தகம், சித்தாமூர், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் மறியல் போராட்டம் நடைபெற்றது. செங்கல்பட்டு இந்தியன் வங்கி எதிரில் தொமுச மாநில துணைத் தலைவர் பொன்ராம் தலைமையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில், சீயூ மாநில துணை பொது செயலாளர் திருச்செல்வன், ஏஐ டியூசி மாவட்ட செயலாளர் ஜகாங்கீர், சிஐடி மாவட்ட செயலாளர் பகத்சிங் தாஸ் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டார் கலந்து கொண்டனர். இவர்களை போலீசார் கைது செய்தனர்.

Related Stories: