வேலூர், பிப்.13: வேலூர் சத்துவாச்சாரியில் கட்டிட மேஸ்திரி கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூர் சத்துவாச்சாரி வ.உ.சி. நகரை சேர்ந்தவர் ராமு(43), கட்டிட மேஸ்திரி. இவருக்கு திருமணமாகி 3 மகன்கள் உள்ளனர். மது பழக்கத்திற்கு அடிமையான ராமு, தினமும் குடித்துவிட்டு அப்பகுதியில் உள்ளவர்களிடம் ரகளையில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதேபோல் நேற்று முன்தினம் இரவும் மதுகுடித்து விட்டு ரகளையில் ஈடுபட்டுள்ளார். பின்னர், வீட்டின் வெளியே சாலையோரம் ராமு படுத்து தூங்கியுள்ளார். நேற்று முன்தினம் அதிகாலை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்தபோது, ராமு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். இதுகுறித்து அவர்கள் சத்துவாச்சாரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில் ராமு கல்லால் சரமாரி தாக்கி கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகலறிந்த ஏஎஸ்பி தனுஷ்குமார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். மேலும், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு துப்புதுலக்க விடப்பட்டது. அது சம்பவ இடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடி நின்றுவிட்டது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியை சேர்ந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கட்டிட மேஸ்திரி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
