நீடாமங்கலம்,ஜன.26: நீடாமங்கலத்தில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி நடந்தது. திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் 16வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி தாசில்தார் தேர்தல் அலுவலர் சரவணகுமார் தலைமையில் நடந்தது. இந்திய தேர்தல் ஆணையம் துவக்கப்பட்ட தினமான ஜனவரி 25ம் தேதி தேசிய வாக்காளர் தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
குடிமக்களிடம் வாக்காளர் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், இளம் தலைமுறை தேர்தலில் பங்களிப்பு செய்யவும் விதமாக அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக தேசிய வாக்காளர் விழிப்புணர்வு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு விழா நடைபெற்று வருவது வழக்கம்.
அதன் ஒரு பகுதியாக நீடாமங்கலத்தில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி தாலுகா அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதியில் வழியாக சென்று பேரூராட்சி அலுவலகத்தில் நிறைவடைந்தது. பேரணியில் தேர்தல் துணை தாசில்தார் அறிவழகன், தனியார் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
