ஊட்டி,ஜன.30: தமிழ்நாடு ஹஜ் கமிட்டி மற்றும் பெடரேசன் சுன்னத் ஜமாத் மதினா மஸ்ஜித் சார்பில் ஹஜ் பயணம் செல்பவர்களுக்கு பயிற்சி முகாம் நேற்று நடந்தது.இஸ்லாமியர்கள் ஆண்டுதோறும் ஹஜ் பயணம் மேற்கொள்கின்றனர். இதுபோன்று ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களுக்கு பல்வேறு வழிமுறைகள் மற்றும் பயணம் மேற்கொள்வது குறித்தும் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் இருந்து இந்த ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களுக்கான பயிற்சி முகாம் ஊட்டியில் உள்ள பெரிய பள்ளிவாசலில் நடந்தது.
இந்த முகாமிற்கு பள்ளி தலைவர் ஜனாப் ஹாஜி சபியுல்லா கான் தலைமை வகித்தார். தமிழ்நாடு ஹஜ் கமிட்டியின் வழிகாட்டி நெறியாளர் ஹபிபுல்லா ரூமி முன்னிலை வகித்து ஹஜ் பயணம் மேற்கொள்வது குறித்தும், அங்கு செல்லும் போது மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் மற்றும் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்தும் விளக்கி கூறினார்.இந்த ஆண்டு புனித மக்காவுக்கு 60க்கும் மேற்பட்டவர்கள் நீலகிரியில் இருந்து செல்வதால், அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. முன்னதாக பள்ளி செயலாளர் ஹாஜி ரசீத் வரவேற்றார். முடிவில் ரபிக் நன்றி கூறினார்.
