ரியல் எஸ்டேட் அதிபரிடம் ₹1.17 கோடி மோசடி வேலூர் எஸ்பி அலுவலக குறைதீர்வு கூட்டத்தில் மனு பங்கு சந்தையில் முதலீடு செய்து இரட்டிப்பு லாபம் பெறலாம் கூறி

வேலூர், நவ.23: பங்கு சந்தையில் முதலீடு செய்து இரட்டிப்பு லாபம் பெறலாம் என ஆசை கூறி ரியல் எஸ்டேட் அதிபரிடம் ₹1.17 கோடி மோசடி செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி வேலூர் எஸ்பி அலுவலகத்தில் நேற்று புகார் மனு அளித்தார். வேலூர் எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் ஏடிஎஸ்பி கவுதமன் தலைமையில் நேற்று நடந்தது. இதில் ஏராளமான பொதுமக்கள் தங்களது குறைகளை மனுக்களாக அளித்தனர். வேலூர் கம்மவான்பேட்டையை சேர்ந்த தேவி என்பவர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: எனது கணவர் ராணுவத்தில பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார். எனக்கு 2 மகன்கள் உள்ளனர். பிளஸ்2 படித்துள்ளனர். உறவினரின் மனைவி சிந்து என்பவர் கடந்த ஓராண்டுக்கு முன்பு என்னிடம், ‘நான் வெளிநாட்டுக்கு செல்கிறேன். வெளிநாட்டில் வேலை செய்தால் நிறைய சம்பாதிக்கலாம், உனது 2 மகன்களுக்கு வெளிநாட்டில் வேலை வாங்கி தருகிறேன். அதற்கு பல லட்சம் செலவாகும்’ என தெரிவித்தார். அதற்கு என்னிடம் அவ்வளவு பணம் இல்லை என கூறினேன். அதற்கு சிந்து, ‘ஆற்காட்டில் எனக்கு தெரிந்த நபர் உள்ளார்.

அவரிடம் நிலத்திற்கான பத்திரம் மற்றும் பாண்டுபத்திரத்தில் கையெழுத்து போட்டு கொடுத்தால் பணம் தருவார்’ என தெரிவித்தார். அதன்படி எனது வீட்டு பத்திரத்தையும், பாண்டு பத்திரத்தில் கையெழுத்தும் போட்டு சிந்துவிடம் கொடுத்தேன். சிந்து, அந்த பத்திரத்தை கொடுத்து ₹8.50 லட்சத்தை பெற்றுக்கொண்டார். ஆனால் கூறியபடி வெளிநாட்டில் வேலை வாங்கி தரவில்லை. பணத்தை திருப்பி கேட்டால் கொலைமிரட்டல் விடுக்கிறார். இதுகுறித்து கணியம்பாடி காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே எனது பணத்தை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார். மனுவை பெற்றுக்கொண்ட ஏடிஎஸ்பி இந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார்.

குடியாத்தம் அடுத்த தொட்டிதுரை, மோட்டூர் பகுதியைச் சேர்ந்த முருகன் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: நான் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறேன். என்னிடம் என் நண்பர்கள் பரதராமி, குற்றாலபள்ளி, கல்லபாடி, ரெட்டியூர், மகாதேவமலை, சென்னை, மொர்ச்சபள்ளியை சேர்ந்த 8 பேர் பங்கு சந்தையில் முதலீடு செய்து இரட்டிப்பு லாபம் பெறலாம் என்று ஆசை வார்த்தை கூறினர். அதனை நம்பிய நான் அவர்களிடம் தனித்தனியாக என மொத்தம் ₹1 கோடியே 17 லட்சத்தை கொடுத்தேன். தற்போது நான் பணத்தை திருப்பி தரும்படி கேட்டேன். அதற்கு அவர்கள் தனி தனியாக கூலிக்கு அடியாட்களை வைத்து என்னை கொலை செய்து விடுவதாக மிரட்டுகின்றனர். நான் என் சொத்துக்களை அடமானம் வைத்து பணம் கொடுத்தேன். அதன்பிறகு தான் ஏமாந்த விஷயம் தெரிந்து பணத்தை கேட்டதால் என்னை கொலை செய்ய முயற்சி செய்கிறார்கள். அவர்களால் என் உயிருக்கு ஆபத்து உள்ளது. என் குடும்பத்தினரும் தினமும் பயந்து கொண்டு வெளியே போகாமல் உள்ளனர். எனவே 8 பேரிடம் இழந்த பணத்தை மீட்டு தர வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

வேலூர் அடுத்த மேல்மொணவூர் பகுதியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் சம்பத் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: என்னுடைய செல்போன் எண்ணுக்கு ஒரு குறுச்செய்தி வந்தது. அதில் ₹3 லட்சம் உடனடியாக லோன் தருகிறோம். அதற்கு நீங்கள் சர்வீஸ் சார்ஜ் என்ற முறையில் ₹42,500 கட்ட வேண்டும் என்று செல்போனில் பேசினார்கள். நானும் பல்வேறு தவணைகளில் ₹42 ஆயிரம் செலுத்தி விட்டேன். பிறகு அவர்களை செல்ேபானில் அழைத்தேன். விரைவில் லோன் தொகை உங்கள் வங்கி கணக்கிற்கு வந்துவிடும் என்றார்கள். ஆனால் இதுவரை வரவில்லை. இப்போது செல்போனும் எடுப்பது இல்லை. எனவே என்னுடைய பணத்தை மீட்டு தர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

வேலூர் அடுத்த அ.கட்டுபடி பகுதியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ரமேஷ்குமார் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: என் மகனுக்கு ராணுவத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி அரியூர் பகுதியைச் சேர்ந்தவர் என்னிடம் கடந்த 2021ம் ஆண்டு ₹2 லட்சம் பெற்றுக்கொண்டார். ஆனால் வேலை வாங்கி தரவில்லை. பணத்தை கேட்டால் கொலை மிரட்டல் விடுகிறார். என்னுடய மனைவி தலையில் அடிப்பட்டு கோமா நிலையில் உள்ளார். எனவே என்னுடைய பணத்தை மீட்டு தர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

காட்பாடி அடுத்த லத்தேரி கோரப்பட்டரை பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தீயணைப்பு நிலைய அலுவலர் பெருமாள்சாமி அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: என்னுடைய மனுக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூறி காட்பாடி வண்றதாங்கல் பகுதியைச் சேர்ந்த ஒருவர் என்னிடம் ₹1 லட்சத்து 4 ஆயிரம் வாங்கி சென்றார். கடந்த 2018ம் ஆண்டு பணத்தை கொடுத்தேன். 3 மாதம் கழித்து வேலை வரும் என்று சொன்னார். ஆனால் 6 மாதம் ஆகியும் வேலை வரவில்லை. இதையடுத்து பணத்தை கேட்டேன். பணத்தை கொடுத்துவிடுவதாக கூறினார். ஆனால் 4 ஆண்டுகள் ஆகியும் இன்னும் பணம் கொடுக்கவில்லை. பணத்தை கேட்டுக்கும் போது எல்லாம் தட்டிக்கழித்து வருகிருகிறார். எனவே என்னுடைய பணத்தை மீட்டு தர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

The post ரியல் எஸ்டேட் அதிபரிடம் ₹1.17 கோடி மோசடி வேலூர் எஸ்பி அலுவலக குறைதீர்வு கூட்டத்தில் மனு பங்கு சந்தையில் முதலீடு செய்து இரட்டிப்பு லாபம் பெறலாம் கூறி appeared first on Dinakaran.

Related Stories: