தேர்தல் செலவுக்காக ₹11 லட்சம் பெற்று பாஜ நிர்வாகி மிரட்டல் எஸ்பியிடம் பட்டதாரி வாலிபர் புகார் காட்பாடியில் காண்ட்ராக்ட் வேலை ஆசைக்காட்டி

வேலூர், ஜூன் 27: காட்பாடியில் காண்ட்ராக்ட் வேலை ஆசைக்காட்டி தேர்தல் செலவுக்காக ₹11 லட்சம் பெற்று பாஜ நிர்வாகி மிரட்டல் விடுப்பதாக வேலூர் எஸ்பி மணிவண்ணனிடம் பட்டதாரி வாலிபர் புகார் அளித்தார். வேலூர் எஸ்பி அலுவலகத்தில் நேற்று எஸ்.பி. மணிவண்ணன் தலைமையில் குறைதீர்வு முகாம் நடந்தது. இதில் காட்பாடி தாலுகா பள்ளிக்குப்பம் ஈசன் ஓடை பகுதியைச் சேர்ந்த நவீன்குமார்(23) என்பவர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: நான் பி.டெக் ஐடி படித்துள்ளேன். எனது தாய் மாமா மூலமாக பெரியபுதூர் பகுதியைச் சேர்ந்த ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. அப்போது அவர், நீ பொறியியல் படித்துள்ளாய் எனவே காண்ட்ராக்ட் ஓர்க் எடுத்து வேலை செய்யலாம் என ஆசைவார்த்தை கூறினார். பின்னர் அவர் கூறியதை நம்பி, அவருடன் சுயதொழில் ஆரம்பிக்க ஒப்புக்கொண்டேன். அப்போது அவர் அவசரமாக தேர்தல் செலவுக்காக கொடுக்க வேண்டும் என ₹5 லட்சம் கேட்டார். நான் ₹5 லட்சம் அனுப்பினேன். தொடர்ந்து பல்வேறு கட்டங்களாக மொத்தம் ₹11 லட்சத்து 96 ஆயிரத்து 500 கொடுத்துள்ளேன். ஆனால் அந்த பணத்தை தராமல் ஏமாற்றி வருகிறார். பணத்தை கேட்டபோது ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுக்கிறார். மேலும் தான் பாஜகவில் உள்ளதாகவும், காவல்துறை அதிகாரிகளுக்கு பழக்கம் என்றும், தன்னை யாரும் ஒன்றும் செய்ய முடியாது என்றும் கூறி மிரட்டி வருகிறார். நான் மாதம் ₹16 ஆயிரம் வட்டி கட்டி வருகிறேன். எனவே எனது பணத்தை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார். இதுதொடர்பாக எஸ்பி உத்தரவின்பேரில், போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post தேர்தல் செலவுக்காக ₹11 லட்சம் பெற்று பாஜ நிர்வாகி மிரட்டல் எஸ்பியிடம் பட்டதாரி வாலிபர் புகார் காட்பாடியில் காண்ட்ராக்ட் வேலை ஆசைக்காட்டி appeared first on Dinakaran.

Related Stories: