காடுகளில் பதுங்கிய குற்றவாளிகளை பிடிப்பது எப்படி? 2ம் நிலை பெண் காவலர்களுக்கு 2 நாள் பயிற்சி வேலூர் கோட்டையில் அளிக்கப்பட்டது

வேலூர், நவ.17: வேலூர் கோட்டை காவலர் பயிற்சி பள்ளியில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட 2ம் நிலை பெண் காவலர்களுக்கு காடுகளில் பதுங்கிய குற்றவாளிகளை பிடிப்பது எப்படி? என்ற 2 நாள் பயிற்சி நேற்று தொடங்கியது.
வேலூர் கோட்டை வளாகத்தில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் மதுரை, கோவை, விழுப்புரம் உள்பட 17 மாவட்டங்களை சேர்ந்த 2ம் நிலை பெண் காவலர்கள் 273 பேருக்கு கடந்த ஜூன் மாதம் 1ம்தேதி முதல் 7 மாத கால அடிப்படை பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி தினமும் காலை, மாலை என இருவேளையும் கவாத்து பயிற்சி, யோகா, முதலுதவி அளித்தல், நன்னடத்தை, கலவரத்தை கட்டுப்படுத்துவது, சட்டம் மற்றும் கணினியை கையாளுவது உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் காவல் நிலையங்களில் பணியாற்றுவது எப்படி?, நீதிமன்றத்தில் கைதிகளை ஆஜர்படுத்துவது எப்படி?, எஸ்பி அலுவலக பணிகள், துப்பாக்கி சுடுதல், துப்பாக்கி கையாளும் முறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இந்நிலையில் குற்றவாளிகள் காடுகளில் பதுங்கிவிட்டால் அவர்களை கைது செய்வது எப்படி?, காடுகளில் முகாமிட்டு குற்றவாளிகளை பிடிப்பது குறித்து ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள சிறப்பு டாஸ்க் போர்ஸ் (எஸ்டிஎப்) என்ற சிறப்பு பிரிவு மூலம் 2 நாள் கமண்டோ பயிற்சி நேற்று தொடங்கியது. இப்பயிற்சியில், குற்றவாளிகள் காடுகளில் பதுங்கினால் அவர்களை எவ்வாறு பிடிப்பது, காடுகளில் நம்மை எவ்வாறு பாதுகாப்பது?, காட்டில் முகாம் அமைப்பது எப்படி?, காட்டில் இருந்தபடி உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிப்பது எப்படி?, காடுகளில் படுகாயமடைந்த சக காவலர்களை மீட்பது எப்படி? என்பது உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் நேற்றும், இன்றும் வழங்கப்பட உள்ளதாக காவலர் பயிற்சி பள்ளி போலீசார் தெரிவித்தனர்.

The post காடுகளில் பதுங்கிய குற்றவாளிகளை பிடிப்பது எப்படி? 2ம் நிலை பெண் காவலர்களுக்கு 2 நாள் பயிற்சி வேலூர் கோட்டையில் அளிக்கப்பட்டது appeared first on Dinakaran.

Related Stories: