மதுரை : தமிழகம் முழுவதும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் கிரானைட் குவாரி முறைகேடு பெரும் பரபரப்பை உண்டாக்கியது. இதுதொடர்பாக ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தலைமையில் கமிஷன் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. அதன்படி, மதுரையில் சகாயம் விசாரணை நடத்தி, கடந்த 2015ல் சென்னை ஐகோர்ட்டில் அறிக்கையை தாக்கல் செய்தார். அறிக்கையில், ‘கிரானைட் ஊழலில் அரசுக்கு ரூ.1 லட்சத்து 6 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. பல்வேறு குற்றங்களும் நிகழ்ந்துள்ளன. எனவே சிபிஐ விசாரணை நடத்தி மூடி மறைக்கப்பட்ட பல்வேறு விவகாரங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும்’ என்பது உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகள் அளித்திருந்தார். இதுதொடர்பாக எந்த நேரமும் நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இச்சூழலில் திடீரென தமிழக அரசு, மத்திய அரசின் புவியியல் மற்றும் கனிமவளத்துறைக்கு கடிதம் அனுப்பி உள்ளது. அதில், ‘சகாயம் கமிஷன் நடத்திய ஆய்வறிக்கையில் திருப்தி இல்லை. எனவே கிரானைட் குவாரி பகுதிகளில் மத்திய அரசின் புவியியல் மற்றும் கனிமவளத்துறை சரியான முறையில் ஆய்வு நடத்தி அறிக்கை அளிக்க வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த செயல், சகாயம் கமிஷன் அறிக்கையை முடக்குவதற்கான நடவடிக்கை என்று புகார் எழுந்துள்ளது.
இந்த விவகாரம் மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில் வெடித்தது. சகாயம் கமிஷனில் பல்வேறு ஆதாரங்களை அளித்த வழக்கறிஞரும், விவசாயிகள் சங்க தலைவருமான பழனிச்சாமி, `சகாயம் கமிஷன் அறிக்கை அளித்துள்ள வேளையில், மத்திய அரசின் புவியியல் மற்றும் கனிம வளத்துறை ஆய்வு நடத்தி அறிக்கை அளிக்க அரசு கடிதம் எழுதி இருப்பதன் மர்மம் என்ன? ஊழலை மூடி மறைக்கும் திட்டமாக தோன்றுகிறது’ என்று சந்தேகத்தை எழுப்பினார். இதற்கு பதிலளித்த மதுரை மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குனர், `கிரானைட் குவாரி உரிமையாளர்கள் கோரிக்கையை ஏற்று, மறுஆய்வுக்கு தமிழக அரசு கடிதம் எழுதி உள்ளது’ என்று ஊர்ஜிதம் செய்தார். இதனால், கிரானைட் விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
Copyright © 2016
All rights reserved to Kal Publications
Design, Development and Maintenance by Web team