×

ஸ்மார்ட் வாட்ச்சும் சர்க்கரை நோயும்!

நன்றி குங்குமம் டாக்டர்

சர்க்கரை நோய் இந்தியாவில் மிகவும் பொதுவான நோய்களில் ஒன்றாகும். இந்திய மக்கள் தொகையில் சுமார் 11.2% பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மாதந்தோறும், தங்களது ரத்த சர்க்கரை அளவை பரிசோதனை செய்து கொள்வது வழக்கமான ஒன்றாகும். அவ்வாறு சர்க்கரை அளவை கண்டுபிடிக்க தற்போது வரை, விரலிலிருந்து ஊசி மூலம் துளையிட்டு ரத்தம் எடுத்து பரிசோதிக்கப்பட்டு வருவது வழக்கமாகும்.

ஆனால், இது வலிமிகுந்ததாக உள்ளது. இதனை தவிர்க்கவும் சருமத்தில் துளையிடாமல் ரத்த சர்க்கரை அளவை ஸ்மார்ட்வாட்ச்கள் மூலம் கண்டறிந்து கொள்ளலாம் என ஸ்மார்ட்வாட்ச் நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இது நம்ப தகுந்ததல்ல என்று சமீபத்தில் அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) தெரிவித்துள்ளது. இதன் உண்மைத் தன்மை குறித்து நம்முடன் பகிர்ந்துகொள்கிறார் சர்க்கரை நோய் நிபுணரான மருத்துவர் வி.மோகன்.

முன்பெல்லாம் ரத்த சர்க்கரை அளவை அறிந்துகொள்ள, குளுக்கோமீட்டர் எனும் சாதனத்தை பயன்படுத்தி, அதில் ஒரு சொட்டு ரத்தத்தை விட்டு ஆய்வு செய்வோம். அந்த சமயத்தில் எவ்வளவு சர்க்கரை அளவு இருக்கிறதோ அதுதான் ஒருவருக்கு சர்க்கரையின் அளவாக கருதப்படும். இதனை எஸ்.எம்.பி.ஜி(SMBG) என்று சொல்வோம். அதன்பின்னர், கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு சிஜிஎம்(CGM) என்ற பரிசோதனை முறை வந்தது. அது என்னவென்றால், காயின் மாதிரி இருக்கும் ஒரு பொருளை கையில் ஓட்டிவிடுவார்கள். இது சர்க்கரையின் அளவை ஆராய்ந்து சொல்லும். மேலே சொன்ன இரண்டு பரிசோதனை முறைகளுக்கும் சுலபமான வித்தியாசம் சொல்ல வேண்டும் என்றால், முதலில் சொன்னது போட்டோ போன்றது. இரண்டாவதாக சொன்னது வீடியோ போன்றது.

ஆனால், இந்த இரண்டாவதாக சொன்ன சி.ஜி.எம் பரிசோதனை என்பது ரத்தத்திலிருந்து சர்க்கரை அளவை ஆராயாமல், அடித்தோலின் நிலையிலிருந்து கண்டறிந்து சொல்லும். அதுவும், அரைமணி நேரம் கழித்துதான் சர்க்கரையின் அளவு தெரியும். இதனால், திடீரென்று ஒருவருக்கு லோசுகர் ஏற்பட்டால் உடனடியாக தெரியாது. இந்த சோதனை முறை அரைமணி நேரத்துக்கு முந்தைய அளவைத்தான் சொல்லும். ஆனால், இதில் ஒரு வசதி என்னவென்றால், இது வீடியோ போன்றது என்பதால், சர்க்கரையின் அளவு காலையில் எவ்வளவு இருந்தது மதியம் எவ்வளவு இருந்தது, இரவு எவ்வளவு இருந்தது என்று துல்லியமாக கொடுத்துக் கொண்டே இருக்கும்.

இதனால் இந்த முறையை பலரும் பின்தொடர ஆரம்பித்தார்கள். இது ஓரளவு பலனும் தந்தது.அந்தவகையில் தற்போது, புதிதாக தொழில்நுட்ப உதவிகளுடன், ஸ்மார்ட் வாட்ச்களில் சர்க்கரை அளவை கண்டறியும் முறை வந்துள்ளது. ஸ்மார்ட் வாட்ச் எப்படி நேரத்தை காண்பிப்பதுடன், நாம் எத்தனை அடிகள் நடந்து செல்கிறோம், அந்த நிமிடத்தில் நமது பிபி எவ்வளவு இருக்கிறது. இதயத் துடிப்பு எப்படி இருக்கிறது போன்றவற்றை அறிந்து சொல்கிறதோ. அதுபோலவே, சர்க்கரையின் அளவையும் அறிந்து சொல்லும் தொழில்நுட்பத்தை ஸ்மார்ட் வாட்ச்களில்
புகுத்தியுள்ளனர்.

ஆனால், இந்த தொழில் நுட்பம் தற்போதைய கண்டுபிடிப்பு அல்ல, பத்து ஆண்டுகளுக்கு முன்பே கலிபோர்னியாவில் உள்ள சிக்னஸ் என்ற ஒரு நிறுவனம், குளுக்கோ வாட்ச் தயாரித்து வெளியிட்டனர். இதில் நேரத்தை பார்ப்பது போல குளுக்கோஸின் அளவை அவ்வப்போது தெரிந்து கொள்ள முடியும் என்று நினைத்தார்கள். ஆனால், அது உலகளவில் எடுபடவில்லை. காரணம், வெவ்வேறு நாட்டின் காலநிலையும், சீதோஷணநிலையும், மாறுபட்டதால், அது மற்ற நாட்டினருக்கு பொருந்தவில்லை. இதனால், அந்த முறை இந்தியா உள்பட பல நாடுகளும் நம்ப தகுந்ததில்லை என நிராகரித்துவிட்டனர்.

தற்போது மீண்டும் அதே தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டு சற்று நவீனமயமாக்கி ஸ்மார்ட்வாட்ச் மூலம் சர்க்கரை குளுக்கோஸ் அளவை அவ்வப்போது கண்டறிந்து கொள்ளலாம் என்று அறிமுகப்படுத்தியுள்ளனர். ஆனால், இந்த தொழில்நுட்பம் குறித்து அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) சமீபத்தில் ஒரு எச்சரிக்கையை வெளியிட்டது. சருமத்தில் துளையிடாமல் ரத்த சர்க்கரை அளவை அளவிடுவதாகக் கூறும் ஸ்மார்ட்வாட்ச்கள் அல்லது அணியக்கூடிய சாதனங்களைப் பயன்படுத்த வேண்டாம் என்று நுகர்வோருக்கு அறிவுறுத்துகிறது. இந்த சாதனங்கள் தவறான முடிவுகளை வழங்கக்கூடும் என்று இந்நிறுவனம் கூறுகிறது, மேலும், சர்க்கரை நோயாளிகள் இதன்மூலம் மருந்துகளின் தவறான அளவுகளை எடுத்துக்கொள்ள வழிவகுக்கும் என தெரிவித்துள்ளது.

பொதுவாக, சர்க்கரைநோயைப் பொருத்தவரை, எப்.டி.ஏ அங்கீகரித்தால் மட்டுமே அது நம்ப தகுந்த ஒன்றாகும். ஆனால், எப்.டி.ஏ இது குறித்து பல ஆய்வுகள் நடத்திய பின்னர், இதுவும் குளுக்கோ வாட்ச் போன்றதுதான் நம்பத் தகுந்த ஆதாரங்கள் துல்லியமாக இல்லை. எனவே ஸ்மார்ட் வாட்ச் மூலம் சர்க்கரை அளவை முழுமையாக தெரிந்து கொள்ள முடியாது என்று தெரிவிக்கின்றது. மேலும் ஸ்மார்ட் வாட்ச் ரீடிங்கை நம்பி யாரும் ஏமாறவேண்டாம் என்றும் தெரிவிக்கிறது. அதனால், சர்க்கரை நோயாளிகள் முடிந்தளவு ரத்த பரிசோதனை மூலம் சர்க்கரை அளவை தெரிந்து கொள்வதே சிறந்ததாகும்.

தொகுப்பு: ஸ்ரீதேவி

The post ஸ்மார்ட் வாட்ச்சும் சர்க்கரை நோயும்! appeared first on Dinakaran.

Tags : Kumkum ,India ,Dinakaran ,
× RELATED குதிகால் வலி