×

ரிஷபம்

செய்யும் தொழிலை தெய்வமாக மதிக்கும் நீங்கள், தொடங்கிய வேலையை முடிக்கும் வரை ஓய மாட்டீர்கள். உங்கள் ராசிநாதன் சுக்கிரன் இந்த மாதம் முழுக்க சாதகமான வீடுகளில் செல்வதால் பழைய வாகனத்தை தந்து விட்டு புதுசு வாங்குவீர்கள். பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மாறும். மகனுக்கு நல்ல வாழ்க்கைத் துணை அமையும். மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். கூடுதல் அறைக் கட்டுவது, வீடு கட்டுவது போன்ற முயற்சிகள் பலிதமாகும். கடந்த ஒரு மாத காலமாக உங்களுடைய ராசிக்குள் அமர்ந்து உங்களை பாடாய்படுத்திய சூரியன் இப்போது 2ம் வீட்டிற்குள் நுழைந்திருப்பதால் அரசு சம்பந்தப்பட்ட காரியங்களும் நல்ல விதத்தில் முடியும். எதிர்ப்புகள் விலகும். வழக்குகளும் சாதகமாகும். என்றாலும் முன்கோபம், கண் எரிச்சல், காது வலி நீங்கும். 6ல் குரு நிற்பதால் வீண் பழிச்சொல்லுக்கு ஆளாவீர்கள். புதிய முயற்சிகளில் தடுமாற்றம் ஏற்படும். அரசுக்கு செலுத்தவேண்டிய வரியை உடனுக்குடன் செலுத்திவிடுவது நல்லது.

புதன் இந்த மாதம் முழுக்க சாதகமாக இருப்பதால் செலவுக்கு பணம் வரும். கொடுக்கல், வாங்கலில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். உறவினர்கள் எதிர்பார்ப்புகளுடன் பேசுவார்கள். நட்பு வட்டம் விரியும். செவ்வாயும், கேதுவும் சேர்ந்து 9ல் நிற்பதால் சகோதர வகையில் இருந்த மனத்தாங்கல் நீங்கும். என்றாலும் முன்கோபம் வரும். பணவரவு அதிகரித்தாலும் செலவுகள் இருக்கும். சொன்ன தேதியில் பணத்தை தந்து முடித்து பழைய கடனில் ஒரு பகுதியை தீர்ப்பீர்கள். அரசியல்வாதிகளே! தலைமைக்கு நெருக்கமாவீர்கள். உங்களை நம்பி பெரிய பொறுப்புகளை தலைமை தரும். மாணவர்களே! நீங்கள் எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில், விரும்பிய பாடப் பிரிவில் உயர்கல்வி தொடரும் வாய்ப்பு கிட்டும். கன்னிப் பெண்களே! நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.

வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும். வேற்றுமதம், மொழியினரால் திடீர் திருப்பம் உண்டாகும். ஏற்றுமதி, இறக்குமதி வகைகளால் ஆதாயம் உண்டு. இரும்பு, ஸ்கிராப்ஸ், உணவு, கட்டிட உதிரி பாகங்களால் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் ஆர்வம் பிறக்கும். மூத்த அதிகாரிகளுடன் இருந்து வந்த மோதல்கள் விலகும். சக ஊழியர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். ஆனால் அஷ்டமத்துச் சனி தொடர்வதால் வேலைச்சுமை இருந்து கொண்டேயிருக்கும். உங்களைப் பற்றிய வதந்திகளும் வரத்தான் செய்யும். அலுவலகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். கலைத்துறையினரே! இழந்த வாய்ப்புகளை மீண்டும் பெறுவீர்கள். விவசாயிகளே! பூச்சித் தொல்லை குறையும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். புதிய முயற்சிகளில் வெற்றி பெறும் மாதமிது.  

ராசியான தேதிகள்:

ஜூன் 15, 16, 17, 18, 23, 24, 25, 26 மற்றும் ஜூலை 5, 6, 7, 8, 12, 14, 15.

சந்திராஷ்டம தினங்கள்:

ஜூன் 27ம் தேதி நண்பகல் 12.08  மணி முதல் 28, 29ம் தேதி வரை.

பரிகாரம்:

கும்பகோணத்திற்கு அருகேயுள்ள திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரரை தரிசித்து வாருங்கள். ஏழைப் பெண்ணின் திருமணத்திற்கு இயன்றளவு உதவுங்கள்.

Tags :
× RELATED மேஷம்