×

கள்ளச்சந்தையில் மது விற்றவரிடம் ₹50 ஆயிரம் கேட்டு தாக்கிய 3 போலீசார் சஸ்பெண்ட்: தாம்பரம் கமிஷனர் அதிரடி

சென்னை, ஏப்.25: தாம்பரம் அருகே கள்ளச்சந்தையில் மது விற்றவரை தாக்கி, ₹50 ஆயிரம் பணம் கேட்டு மிரட்டிய 3 போலீசாரை, கமிஷனர் அமல்ராஜ் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார். தாம்பரம் அடுத்த மணிமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாலமங்கலம் பகுதியில் கள்ளச்சந்தையில் மது விற்பனை நடப்பதாக மணிமங்கலம் காவல் நிலையத்திற்கு, பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். அதன்பேரில், பணியில் இருந்த மணிமங்கலம் தலைமை காவலர் சங்கர், காவலர்கள் கணேஷ் சிங், ஆனந்தராஜ் ஆகிய 3 பேரும் சாலமங்கலம் பகுதிக்கு சென்றுள்ளனர்.

அங்கு, அதே பகுதியை சேர்ந்த பெருமாள் என்பவர் கள்ளச்சந்தையில் மது விற்றுக்கொண்டிருந்தார். அவரிடமிருந்து 7 வெளிநாட்டு மது பாட்டில்கள், 1,900 ரூபாயை போலீசார் கைப்பற்றியுள்ளனர். மேலும், பெருமாள் மீது வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க ₹50 ஆயிரம் பணம் கேட்டு மிரட்டி உள்ளனர். அப்போது, பெருமாள் பணம் தர மறுக்கவே 3 போலீசாரும் சேர்ந்து பெருமாளை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில், காயமடைந்த பெருமாள் படப்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து மருத்துவமனை சார்பில் மணிமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், வழக்குப்பதிவு செய்து போலீசார் நடத்திய விசாரணையில், கள்ளச்சந்தையில் மது விற்றுக்கொண்டிருந்த பெருமாளிடம் ₹50 ஆயிரம் கேட்டு மிரட்டி, போலீசார் தாக்கியது உறுதியானது. இந்த பிரச்னையில் ஈடுபட்ட 3 போலீசாரையும் தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.

The post கள்ளச்சந்தையில் மது விற்றவரிடம் ₹50 ஆயிரம் கேட்டு தாக்கிய 3 போலீசார் சஸ்பெண்ட்: தாம்பரம் கமிஷனர் அதிரடி appeared first on Dinakaran.

Tags : Tambaram ,Commissioner ,Chennai ,Amalraj ,Chalamangalam ,Manimangalam police ,Dinakaran ,
× RELATED சென்னை தாம்பரம் அருகே முன்விரோதம்...