பெரியார் சிலையை அவமதிக்க வற்புறுத்தல், பாலியல் தொல்லை இந்து மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிக்கு எதிராக பெண் தீக்குளிக்க முயற்சி-திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

திருப்பூர் : பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடும் இந்து மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று தங்களது கோரிக்கை தொடர்பாக மனுக்கள் கொடுக்க பொதுமக்கள் பலர் வந்தனர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் கூட்டம் மற்ற நாட்களைவிட அதிகமாக இருந்தது. இந்நிலையில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஒரு பெண் திடீரென உடலில் மண் எண்ணெய்யை ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

உடனே அந்த பகுதியில் பாதுகாப்பு பணிக்காக நின்ற போலீசார் மற்றும் பொதுமக்கள் அந்த பெண்ணின் உடலில் தண்ணீரை ஊற்றினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.இதனைத்தொடர்ந்து அந்த பெண்ணிடம் போலீசார் நடத்தி விசாரணையில் அவர் திருப்பூர் அம்மாபாளையம் 7-வது தெருவை சேர்ந்த சுதா என்பது தெரியவந்தது.

தொடர்ந்து போலீசார் அவருக்கு அறிவுரை வழங்கி தங்களது பிரச்னையை மனுவாக எழுதி கொடுக்கும்படி தெரிவித்தனர்.

தொடர்ந்து சுதா கலெக்டர் வினீத்திடம் மனு கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:எனக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணாக கடந்த 2018-ம் ஆண்டு விவாகரத்து பெற்றேன். இந்து மக்கள் முன்னேற்ற கழக மாநில நிர்வாகி எனக்கு அறிமுகமானார். இருவரும் நண்பர்களாக பழகினோம். ஆனால் அவர் என்னை தவறான பாதையில் வழி நடத்த முயன்றார். மேலும், ரயில் நிலையம் முன்பு உள்ள பெரியார் சிலைக்கு செருப்பு மாலை அணிவிக்க சொன்னார். ஆசைக்கு இணங்கும்படி பாலியல் தொல்லை கொடுத்தார்.

இது தொடர்பாக கமிஷனர் அலுவலகம், திருமுருகன்பூண்டி போலீசில் புகார் கொடுக்கும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்நிலையில் அவர் தற்போது எனக்கு கொலை மிரட்டல் விடுத்து, முகநூலில் அவதூறு பரப்பி வருகிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் நான் தற்கொலை செய்வதை தவிர வேறு வழியில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: