புனித ஹஜ் பயணம் செல்லும் பயணிகளுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.10 கோடி மானியம் ஒதுக்கீடு: முதல்வருக்கு ஹஜ் அசோசியேஷன் பாராட்டு

சென்னை: இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் பிரசிடெண்ட் அபூபக்கர் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் இருந்து புனித ஹஜ் பயணம் செல்லும் பயணிகளுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.10 கோடி மானியத் தொகை ஒதுக்கி இஸ்லாமியர்களின் மனதில் நிரந்தர இடம் பிடித்திருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். தமிழ்நாடு ஹாஜிகளுக்கு இன்று முதல் நபர் ஒருவருக்கு தலா ரூ.17 ஆயிரத்து 480 வரவு வைக்கப்பட்டுள்ளது.

மே 26 முதல் ஜூன் 9ம் தேதி வரை பயணம் செல்லும் ஹாஜிகளுக்கு ரூ.17,480 என்பது மிகப்பெரிய ஊக்கத் தொகையாக, உதவித்தொகையாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. வந்தோருக்கெல்லாம் வாரி வழங்கும் முதல்வருக்கு இந்திய ஹஜ் அசோசியேஷன் சார்பில் மனம் நிறைந்த வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். மே 26ம் தேதி (இன்று) இரவு 8.30 மணிக்கு சென்னையில் இருந்து ஹஜ் செல்லும் முதல் விமானம் பயணப்பட இருக்கிறது.

எனவே தமிழ்நாட்டில் இருந்து அரசின் மூலமாக செல்லும் சுமார் 5 ஆயிரம் பயணிகள் இதன் மூலம் பயனடைவார்கள். வரும் காலங்களில் இந்த எண்ணிக்கை நிச்சயமாக உயரும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. கலைஞர், முதலமைச்சராக இருந்தபோது இஸ்லாமியர்களுக்கு எத்தனை, எத்தனையோ உதவிகளை செய்து வந்தார். தந்தை வழியில் தற்போது அவரது மகனும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினும் பயணிக்கிறார் என்பதை நன்றி உணர்வோடு நினைத்துப் பார்க்கிறோம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post புனித ஹஜ் பயணம் செல்லும் பயணிகளுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.10 கோடி மானியம் ஒதுக்கீடு: முதல்வருக்கு ஹஜ் அசோசியேஷன் பாராட்டு appeared first on Dinakaran.

Related Stories: