உள்துறை, போக்குவரத்து துறை செயலாளர்கள் ஆலோசனை போக்குவரத்து-காவல்துறை பிரச்னைக்கு சுமுகத்தீர்வு: பேருந்துகளுக்கான அபராதம் திரும்ப பெறப்படும் என காவல்துறை தகவல்

சென்னை: உள்துறை செயலாளரும், போக்குவரத்துத்துறை செயலாளரும் மேற்கொண்ட ஆலோசனைக்கு பின்னர் போக்குவரத்து துறை மற்றும் காவல்துறை இடையேயான பிரச்னைக்கு சுமுக தீர்வு காணப்பட்டுள்ளது. பேருந்துகளுக்கு விதிக்கப்பட்ட அபராதமும் திரும்பப் பெறப்படும் என காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை அன்று திருநெல்வேலி வழியாக தூத்துக்குடிக்கு சென்ற அரசுப் பேருந்தில் நான்குநேரியில் ஏறிய ஆறுமுகபாண்டி என்ற காவலர் சீருடையில் இருந்தபடி டிக்கெட் எடுக்க மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமுக வலைத்தளங்களில் பரவியது.

இது தொடர்பாக விளக்கம் அளித்த போக்குவரத்து துறை காவலர்கள் பேருந்தில் பயணிக்கும் போது கட்டாயம் பயணச்சீட்டு எடுக்க வேண்டும். வாரண்ட் இருக்கும் பட்சத்தில் மட்டுமே அவர்களுக்கு கட்டணமில்லா பயணம் அனுமதிக்கப்படுகிறது என்று தெரிவித்திருந்தது.  இதனை தொடர்ந்து போக்குவரத்து விதிகளை மீறியதாக அரசு பேருந்துகளுக்கு தமிழக போலீசார் அபராதம் விதிக்கத் தொடங்கினர். நோ பார்க்கிங், சீட் பெல்ட், அதிக பயணிகள் உள்ளிட்ட காரணங்களுக்காக அரசு பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

காவல்துறைக்கும் , போக்குவரத்து துறைக்கும் இடையே இருந்த மோதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் இதனால் மக்கள் பெரிதும் சிரமமடைந்தனர். மேலும் இந்த பிரச்னைக்கு உடனடியாக தீர்வுகாண வேண்டும் என அரசியல் கட்சியினர், தொழிற்சங்கத்தினர் வலியுறுத்தினர். இந்நிலையில் இந்த பிரச்னைக்கு தீர்வு காண முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியதன் அடிப்படையில் உள்துறை செயலாளர் அமுதா, போக்குவரத்துத்துறை செயலாளர் பனீந்திரரெட்டி ஆகியோர் நேற்று ஆலோசனை மேற்கொண்டனர்.

இந்த ஆலோசனைக்கு பின்னர் பிரச்னைக்கு சமூகத் தீர்வு காணப்பட்டுள்ளதாக போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.  மேலும் பேருந்துகளுக்கு விதிக்கப்பட்ட அபராதங்களும் திரும்ப பெறப்படும் என காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக இந்த பிரச்னை பெரியளவில் பேசப்பட்டு வந்த நிலையில் தற்போது சுமுக தீர்வு காணப்பட்டுள்ளதால் மக்கள், தொழிலாளர் நிம்மதி அடைந்துள்ளனர். மேலும் இந்த பிரச்னை முடிவுக்கு வந்ததற்கு ஆதாரமாக வாக்குவாதத்தில் ஈடுபட்ட காவலர் ஆறுமுகப்படியும், நடத்துநர் சகாய ராஜும் ஒருவருக்கு ஒருவர் சமாதானமாக பேசிக்கொண்ட வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

The post உள்துறை, போக்குவரத்து துறை செயலாளர்கள் ஆலோசனை போக்குவரத்து-காவல்துறை பிரச்னைக்கு சுமுகத்தீர்வு: பேருந்துகளுக்கான அபராதம் திரும்ப பெறப்படும் என காவல்துறை தகவல் appeared first on Dinakaran.

Related Stories: