காப்பீடு தொகையை தராமல் இழுத்தடிக்க தெளிவற்ற நிபந்தனைகளை வங்கிகள் விதிக்கின்றன: சென்னை உயர் நீதிமன்றம் கருத்து

சென்னை: பாலிசி தொகையை வழங்குவதைத் தவிர்க்கும் வகையில் காப்பீட்டு நிறுவனங்கள் தெளிவற்ற முறையில் நிபந்தனைகளை குறிப்பிடுவதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. டி.சி.பி. வங்கியின் சென்னை நுங்கம்பாக்கம் கிளையில், 71 லட்சம் ரூபாய் கடன் பெற்ற லட்சுமி என்பவரின் கணவர், அந்த தொகைக்கு ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியில் காப்பீடு செய்து முறையாக பிரீமியமும் செலுத்தி வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 2021ம் ஆண்டு மே 10ம் தேதி மாரடைப்பால் கணவர் உயிரிழந்ததை அடுத்து, காப்பீட்டுத் தொகையை வழங்கக் கோரி லட்சுமி வங்கிக்கு விண்ணப்பித்துள்ளார். ஆனால், மரணத்துக்கான காரணம் தெரிவிக்கவில்லை. உடல் பிரேத பரிசோதனை செய்யப்படவில்லை. காப்பீட்டில் மாரடைப்பு வராது என்ற காரணங்களைக் கூறி கோரிக்கையை நிராகரித்து வங்கி உத்தரவிட்டது.  இதை எதிர்த்து லட்சுமி தாக்கல் செய்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் என்.விஜயராஜ் ஆஜரானார். வங்கி தரப்பு வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி, காப்பீட்டில் மாரடைப்பும் சேர்க்கப்பட்டுள்ளது. பாலிசி எடுத்த பின், முறையாக பிரீமியம் தொகை செலுத்தப்பட்டு வந்த நிலையில், காப்பீட்டு தொகையை வழங்க முடியாது என வங்கி கூற முடியாது. காப்பீட்டு தொகையை வழங்க மறுத்த வங்கியின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.

நான்கு வாரங்களில் அந்த தொகையை மனுதாரருக்கு வங்கி வழங்கவேண்டும். பாலிசி தொகையை வழங்குவதை தவிர்க்கும் வகையில், காப்பீட்டு நிறுவனங்கள் தெளிவற்ற முறையில் நிபந்தனைகளை குறிப்பிடுகின்றன. இந்த நிபந்தனைகள் பற்றி தனி நபர்களுக்கு சட்ட அறிவு இருக்காது. இதை பயன்படுத்தி, காப்பீட்டுத் தொகையை வழங்குவதை வேண்டுமென்றே வங்கிகள் புறக்கணித்து விடுகின்றன என்று உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

The post காப்பீடு தொகையை தராமல் இழுத்தடிக்க தெளிவற்ற நிபந்தனைகளை வங்கிகள் விதிக்கின்றன: சென்னை உயர் நீதிமன்றம் கருத்து appeared first on Dinakaran.

Related Stories: