அரசின் நிதியுதவி பெறும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் விதிகளை மீறி கட்டணம் வசூலித்தால் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்: மாற்றுத்திறனாளிகள் நலத் துறை எச்சரிக்கை

சென்னை: விதிகளை மீறும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பள்ளிகளின் நிதிகள் அனைத்தும், வட்டியுடன் திரும்ப வசூலிக்கப்படும் என மாற்றுத்திறனாளிகள் நலத் துறை எச்சரித்துள்ளது. 2018-19ம் நிதியாண்டு முதல் தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் நடத்தப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பள்ளிகளில் பணிபுரியும் சிறப்பாசிரியர் மற்றும் தசைப் பயிற்சியாளர்களுக்கு ஊதிய மானியம் வழங்கும் திட்டத்துக்கு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அனுமதி வழங்கியது.

இவர்களுக்கு வழங்கப்படும் மதிப்பூதியம் ரூ.14 ஆயிரத்தில் இருந்து ரூ.18 ஆயிரமாக உயர்த்தி கடந்த 2022-ம் ஆண்டு மே மாதம் அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி, 2024-25ம் நிதியாண்டில் 299 மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு பள்ளிகளில் பணியாற்றும் 882 ஆசிரியர்கள், பயிற்சியாளர்களுக்கு ரூ.19 கோடியே 5 லட்சத்து 12 ஆயிரம், 36 செவித்திறன் குறையுடையோருக்கான சிறப்பு பள்ளிகளில் பணிபுரியும் 107 சிறப்பாசிரியர்களுக்கு ரூ.2 கோடியே 31 லட்சத்து 12 ஆயிரம், 7 பார்வைத்திறன் குறையுடையோருக்கான சிறப்பு பள்ளிகளில் பணியாற்றும் 20 சிறப்பாசிரியர்களுக்கு ரூ.43 லட்சத்து 20 ஆயிரம் என மொத்தம் 1,009 சிறப்பாசிரியர்கள், தசைப் பயிற்சியாளர்களுக்கு 12 மாதங்களுக்கு மாதம் ரூ.18 ஆயிரம் வீதம் ரூ.21 கோடியே 79 லட்சத்து 44 ஆயிரம் ஊதிய மானியம் நிதி ஒதுக்கீடு செய்து மாற்றுத்திறனாளிகள் நல இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த திட்டத்தின்கீழ் பயன்பெறும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் குறைந்தபட்சம் 5 ஆண்டுகளில் மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் மூலம் சிறப்பு பள்ளியின் பதிவு மற்றும் அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும். இந்த பள்ளிகளில் பணிபுரியும் சிறப்பாசிரியர்கள், தசைப்பயிற்சியாளர்கள் முழு நேரம் பணிபுரிகிறார்கள் என்ற சான்று சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் பெறப்படவேண்டும்.

மாநில அரசின் மூலம் இந்த நிதியுதவி பெறும் நிறுவனம், மத்திய அரசு, வெளிநாட்டு மானிய உதவிகளோ, மாணவ-மாணவிகளிடம் இருந்து கட்டணமாகவோ பெறக்கூடாது. அப்படி பெற்றதாக தெரியவரும் பட்சத்தில் இந்த நிதி அனைத்தும் வட்டியுடன் திரும்ப வசூலிக்கப்படும். பள்ளியின் அங்கீகாரமும் ரத்து செய்யப்படும் என்பது உள்பட வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன.

The post அரசின் நிதியுதவி பெறும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் விதிகளை மீறி கட்டணம் வசூலித்தால் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்: மாற்றுத்திறனாளிகள் நலத் துறை எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: