இந்திய அரசு மருத்துவக்கல்லூரிகளில் முதல்முறையாக தேனியில் அறிமுகம்; உடல் உறுப்பை பதப்படுத்தும் பைபர் கிளாஸ் எம்பட்டிங் முறை : அரசு டாக்டர்கள் அசத்தல்

ஆண்டிபட்டி: இந்திய அளவில் முதல்முறையாக தேனி அரசு மருத்துவக் கல்லூரி உடற்கூறியல் துறையில் உடல் உறுப்புகளைப் பதப்படுத்துவதில் புதிய முறையை கண்டுபிடித்து அரசு மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். மருத்துவ மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் வகையில் இறந்த நபர்களின் மனித உறுப்புகள், புற்றுநோய் கட்டிகள், இறந்த சிசு உடல் ஆகியவற்றை பதப்படுத்தி வைத்திருப்பார்கள். இந்நிலையில் உடல் உறுப்புகளை பதப்படுத்தி வைக்கும் நவீன யுக்தியான பிளாஸ்டினேஷன் என்ற புதிய முறையில் உடலுறுப்புகளை பதப்படுத்தும் முறையை கடந்த 2012 முதல் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உடற்கூறியல் துணைத் தலைவர் எழிலரசன் செய்து வருகிறார்.

இந்நிலையில் பிளாஸ்டினேஷன் முறையை மேம்படுத்தி இந்திய அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதல் முறையாக தேனி அரசு மருத்துவக் கல்லூரி உடற்கூறியல் துறையில் பைபர் கிளாஸ் எம்பட்டிங் என்ற புதிய முறையை கண்டுபிடித்துள்ளனர். இதற்கான அறிமுக நிகழ்ச்சி நேற்று முன்தினம் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்றது. இதுபற்றி தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் பாலசங்கர் அளித்த பேட்டி: மருத்துவ மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் வகையில் உடல் உறுப்புகளை பதப்படுத்துவதற்காக ஆரம்ப கட்டத்தில் ஃபார்மலின் பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்த முறையில் பதப்படுத்தப்படும் உறுப்புக்கள் குறிப்பிட்ட சில ஆண்டுகளில் அதன் வடிவம் மாறிவிடுகிறது. இந்த முறைக்கு மாற்றாக உடற்கூறியல் துறை தலைவர் டாக்டர் எழிலரசன் பிளாஸ்டினேஷன் முறையை பின்பற்றி உடல் உறுப்புகளை பதப்படுத்தி வந்தார்.

தற்போது அதனையும் மேம்படுத்தும் விதமாக ஏற்கனவே பிளாஸ்டினேஷன் செய்யப்பட்ட உடல் உறுப்புகளை சுற்றி உருக்கப்பட்ட கண்ணாடிகளை ஊற்றி மோல்டு போல பதப்படுத்தும் முறையை அறிமுகப்படுத்தி உள்ளனர். இந்த முறையில் பதப்படுத்தப்படும் உடல் உறுப்புகள் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் கெட்டுப் போவதில்லை. இந்த பைபர் கிளாஸ் எம்பட்டிங் முறையில் உடல் உறுப்புகளை மட்டுமல்லாது முழு மனித உடலையும் பல ஆண்டுகளுக்கு பத்திரப்படுத்தி வைக்க முடியும். இந்திய அளவில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரிகளில் முதல்முறையாக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நவீன யுக்தியை உடற்கூறியல் துறை கண்டுபிடித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

The post இந்திய அரசு மருத்துவக்கல்லூரிகளில் முதல்முறையாக தேனியில் அறிமுகம்; உடல் உறுப்பை பதப்படுத்தும் பைபர் கிளாஸ் எம்பட்டிங் முறை : அரசு டாக்டர்கள் அசத்தல் appeared first on Dinakaran.

Related Stories: