தொழில் நிறுவனங்களை மிரட்டி ஆட்டைய போட்டார்; பாலியல் வழக்கில் கைதான பாஜ நிர்வாகி ரூ.1 கோடி வசூல்: கட்சி வங்கி கணக்கில் செலுத்தும்படி தலைமை நோட்டீசால் பரபரப்பு

பழநி: பாலியல் புகாரில் கைதான பாஜ மாவட்ட செயலாளர் தனது பதவியை பயன்படுத்தி தொழில் நிறுவனங்களை மிரட்டி ரூ.1 கோடிக்கு மேல் வசூலித்து உள்ளார். வசூலித்த பணத்தை உடனடியாக கட்சி வங்கி கணக்கில் செலுத்தும்படி பாஜ தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திண்டுக்கல் மாவட்டம், பழநி அருகே புஷ்பத்தூர் ஊராட்சியைச் சேர்ந்தவர் மகுடீஸ்வரன். பாஜ மாவட்ட முன்னாள் செயலாளர். இவரது மனைவி செல்வராணி, புஷ்பத்தூர் ஊராட்சி தலைவராக உள்ளார். மகுடீஸ்வரன் கடந்த மாதம் காலை உணவுத்திட்ட பெண் ஊழியருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த புகாரில், கைதாகி சிறை சென்றார். இதனால், அவரது மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்டது.

மகுடீஸ்வரன் ரேக்ளா ரேஸ் நடத்தப்போவதாகவும், நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் கூறி, தொழில் நிறுவனங்களை மிரட்டி ரூ.1 கோடி வரை வசூலித்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக பாஜ மாவட்ட பொருளாளர் ஆனந்த், மகுடீஸ்வரனுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், கட்சி பெயரைப் பயன்படுத்தி தொழில் நிறுவனங்களில் ரூ.1 கோடிக்கு மேல் வசூலிக்கப்பட்டுள்ளது. வசூலித்த தொகைக்கு எந்த நிறுவனத்திற்கும் ரசீது வழங்கவில்லை. எனவே, ‘வசூல் செய்த தொகையை கட்சியின் மாவட்ட நிர்வாக வங்கிக் கணக்கில் செலுத்தி, அதற்கான விவரங்களை வழங்க வேண்டும். தவறினால் கிரிமினல் வழக்கு தொடரப்படும்’ என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நோட்டீஸ் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

The post தொழில் நிறுவனங்களை மிரட்டி ஆட்டைய போட்டார்; பாலியல் வழக்கில் கைதான பாஜ நிர்வாகி ரூ.1 கோடி வசூல்: கட்சி வங்கி கணக்கில் செலுத்தும்படி தலைமை நோட்டீசால் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: