டாஸ்மாக் கடைகளும் கணினிமயம் அக்டோபர் மாதம் முதல் மதுபாட்டில்களுக்கு ‘பில்’: அதிகாரிகள் தகவல்

சென்னை: தமிழகத்தில் தற்போது 4,829 டாஸ்மாக் கடைகள் மூலம் மதுபானம் விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து டாஸ்மாக் கடைகளை நவீனமயமாக்கும் முயற்சிகளை டாஸ்மாக் நிர்வாகம் எடுத்து வருகிறது. குறிப்பாக, டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மது பாட்டில்களுக்கு ரசீது வழங்குதல், மதுபாட்டில்களில் பார்கோட் அச்சிட்டு அதன் மூலம் தொடர்ச்சியாக கண்காணிப்பது உள்ளிட்ட நடவடிவடிக்கை நிர்வாகம் மேற்கொண்டது.

இதற்காக மென்பொருள் தயாரிக்க ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனமான ரயில்டெல் நிறுவனத்துக்கு ரூ.294 கோடி மதிப்பிலான பணியாணை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், டாஸ்மாக் கணினிமயமாக்கும் பணிகள் விரைவில் நிறைவு பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிந்த பின் சில கடைகளில் சோதனை முறையில் செயல்படுத்தப்பட்டு, அக்டோபர் மாதத்தில் மதுபானங்க்களுக்கு ரசீது கொடுக்கும் நடைமுறை அமலுக்கு வரும் என டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரிகள் கூறியதாவது: புதிய அமைப்பு முதலில் நகரம் மற்றும் மாவட்டங்களில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட கடைகளில் தொடங்கப்படும். இது குறைபாடுகளைக் கண்டறிய உதவும். அனைத்து சிக்கல்களும் தீர்க்கப்பட்டவுடன், அக்டோபர் மாதத்தில் அனைத்து கடைகளிலும் செயல்படுத்தப்படும்.

டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களை ஸ்கேன் செய்தால், அந்த பாட்டில் எங்கே வாங்கப்பட்டது, எந்த தேதியில் வாங்கப்பட்டது, இது எந்த பேட்ஜை சேர்ந்தது, மதுபான ஆலையில் இருந்து எப்போது வெளியே கொண்டு வரப்பட்டது போன்ற பல்வேறு விவரங்களை தெரிந்து கொள்ள முடியும். இதன் மூலம் கள்ளச்சந்தையில் மது விற்பனை தடுக்கப்படும். டாஸ்மாக் நிறுவனம் மதுபாட்டில்களை ஸ்கேன் செய்ய வாடிக்கையாளர்களுக்கு மொபைல் போன் செயலியை அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது. இவ்வாறு கூறினர்.

The post டாஸ்மாக் கடைகளும் கணினிமயம் அக்டோபர் மாதம் முதல் மதுபாட்டில்களுக்கு ‘பில்’: அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: