புதிய வழிகாட்டி மதிப்பு வரைவு அறிக்கை மக்கள் கருத்து தெரிவிக்க இணையத்தில் வெளியீடு

சென்னை: பத்திரப் பதிவுத்துறையில், புதிய வழிகாட்டி மதிப்பு வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டு இணையதளத்திலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த வரைவு அறிக்கை மீது பொதுமக்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம் என பத்திரப்பதிவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் நிலங்களுக்கான வழிகாட்டி மதிப்புகள், 2012ம் ஆண்டு சீரமைக்கப்பட்டன. இதையடுத்து 5 ஆண்டுகளுக்கு இந்த நடைமுறையே பின்பற்றி வழிகாட்டி மதிப்பு நிர்ணயிக்கப்பட்டது.

இந்நிலையில் 2017ம் ஆண்டு 2012ல் நிர்ணயிக்கப்பட்ட வழிகாட்டி மதிப்புகளில் ஒட்டுமொத்தமாக 33 சதவீதத்தை குறைத்து அரசு உத்தரவிட்டது. இந்த வழிகாட்டி மதிப்பு, சந்தை மதிப்பை விட மிகவும் குறைவாக இருந்து வந்ததால் 2012ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட வழிகாட்டி மதிப்புகளே அமல்படுத்தப்படும் என கடந்த 2023ம் ஆண்டு ஏப்.1ம் தேதி பதிவுத்துறை அறிவித்தது. 2017ல் நிர்ணயிக்கப்பட்ட வழிகாட்டி மதிப்புகளால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. மேலும் வழிகாட்டி மதிப்புகளில் உள்ள குளறுபடிகளை சரி செய்து வருமானத்தை அதிகரிக்க பதிவுத்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

மேலும் புதிய சந்தை வழிகாட்டி மதிப்பு பதிவேடு தயாரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதற்காக பதிவுத்துறை சார்பில் கிராம நிர்வாக அதிகாரிகள், ரியல் எஸ்டேட் துறையினர் என தொடர்புடைய அனைவரின் கருத்துகள் சேகரிக்கப்பட்டது. புதிய சந்தை வழிகாட்டி மதிப்பு வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை பதிவுத்துறை இணையதளத்திலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் மீது பொதுமக்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post புதிய வழிகாட்டி மதிப்பு வரைவு அறிக்கை மக்கள் கருத்து தெரிவிக்க இணையத்தில் வெளியீடு appeared first on Dinakaran.

Related Stories: