ஊசூர் அடுத்த அத்தியூர் காப்புக்காட்டில் வனவிலங்கு தாகம் தீர்க்கும் தண்ணீர் தொட்டியை பெரியதாக மாற்ற முடிவு: அதிகாரிகள் தகவல்

அணைக்கட்டு: ஊசூர் அடுத்த அத்தியூர் காப்புக்காட்டில் வனவிலங்கு தாகம் தீர்க்கும் தண்ணீர் தொட்டியை பெரியதாக மாற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அணைக்கட்டு தாலுகா ஊசூர் அருகே வேலூர் வனச்சரகத்திற்குட்பட்ட அத்தியூர் காப்புக்காடு உள்ளது. இந்த காப்பு காட்டில்  வன விலங்குகள் தாகம் தீர்ப்பதற்காக சிறய அளவிலான தண்ணீர் தொட்டி ஒன்று அமைக்கபட்டுள்ளது. இதன் அருகில் பைரவர் கோயில் உள்ளது. இந்த தண்ணீர் தொட்டியில் வனத்துறையினர் வெயில் காலங்களில் காட்டில் உள்ள வனவிலங்குகள் தாகம் தீர்ப்பதற்காக தண்ணீர் நிரப்பி வருகின்றனர். பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தொட்டி தற்போது சேதமடைந்துள்ளது. இதனால், அதில் தண்ணீர் நிரப்பினாலும், மழை பெய்தாலும் அதில் நீர் தேங்காமல் உடனடியாக பூமிக்கு அடியில் சென்றுவிடுகிறது.

இதனால், அங்கு தண்ணீர் தேடி வரும் குரங்குகள், மான்கள், மாடுகள் அருகே உள்ள கோயிலில் தஞ்சமடைகிறது. இதனால், கோயிலுக்கு வரும் பக்தர்கள் சிரமப்படுகின்றனர். மேலும், காட்டில் உள்ள விலங்குகள் தண்ணீர் தேடி அடிக்கடி ஊருக்குள் வருவதால் கிராம மக்கள் அதற்கு தண்ணீர் கொடுத்து காட்டிற்குகள் விரட்டி வருகின்றனர். எனவே, இந்த தொட்டியை சீரமைத்து பெரிய அளவிலான தொட்டி கட்டி தர வேண்டும் எனஅப்பகுதி மக்கள் தாலுகா, மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் தொடர்ந்து கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, கலெக்டர் சண்முகசுந்தரம் உத்தரவின் பேரில் கடந்த 27ம் தேதி பிடிஓ அமுதவள்ளி, மண்டல துணை பிடிஓ சிவகாமி, ஊராட்சி செயலாளர் பாஸ்கரன் ஆகியோர் அத்தியூர் காப்புகாட்டிற்கு சென்று அந்த தொட்டியை ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து வேலூர் ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் கூறுகையில், அத்தியூர் காப்புகாட்டில் கட்டப்பட்டுள்ள சிறிய தொட்டியை சீரமைத்து அதிக ஆழமும், அகலமும் கொண்ட பெரிய தொட்டியாக மாற்றியமைக்கப்பட உள்ளது.அவ்வாறு அமைக்கப்படும் தொட்டியில் ஆழ்துளை கிணறு மூலம் பைப் அமைத்து எப்போதும் தண்ணீர் இருக்கும் வகையில் அமைக்க திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது. விரைவில், வனத்துறை, கலெக்டரின் அனுமதி பெற்று அதற்கான பணிகள் தொடங்கப்பட உள்ளது என்றனர்.

Related Stories: