விருப்பமனு அளித்தவர்களிடம் திமுகவில் நேர்காணல் தொடங்கியது: முதல்வர் மு.க.ஸ்டாலின் நடத்தினார்: வெற்றி நிலவரம் குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டார்

 

சென்னை: திமுக வேட்பாளர்களுக்கான நேர்காணல் நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று புதுச்சேரியில் போட்டியிடுபவர்களுக்கான நேர்காணல் நடந்தது. நேர்காணலில் கலந்து கொண்டவர்களிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டார். தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 23ம் தேதி நடைபெற உள்ளது.

தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வருகிற 30ம் தேதி தொடங்க உள்ளது. இன்னும் குறுகிய நாட்களே உள்ளதால் அனைத்து அரசியல் கட்சிகளும் முழுவீச்சில் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர். கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, விருப்ப மனு விநியோகம் என்று தேர்தல் திருவிழா களைகட்ட தொடங்கியுள்ளது.

இந்த சட்டமன்ற தேர்தலில் ஆளுங்கட்சியான திமுக மெகா கூட்டணியை அமைத்துள்ளது. அதிமுக-பாஜ கூட்டணியும், தவெக, நாம் தமிழர் கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முடிந்து இதுவரை காங்கிரஸ் 28 தொகுதிகள், மதிமுக 4 தொகுதிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

கம்யூனிஸ்ட், விசிக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து வருகிறது. திமுக கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை ஒருபுறம் நடத்தினாலும், மறுபுறம் தங்கள் கட்சி சார்பில் வேட்பாளர்கள் தேர்வு செய்யும் பணியிலும் ஈடுபட்டு வருகிறது. அதே நேரத்தில் புதுச்சேரி மாநில சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 9ம் தேதி நடக்கிறது.

இந்நிலையில், திமுக சார்பில் தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள 30 சட்டமன்ற தொகுதிகளுக்கும் போட்டியிட விருப்ப மனுக்கள் கடந்த மாதம் 20ம் தேதி முதல் பெறப்பட்டது. தொடர்ந்து இந்த மாதம் 6ம் தேதி வரை விருப்ப மனுக்கள் பெறப்பட்டன.

தற்போதைய அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட விருப்ப மனுக்களை அளித்தனர். அதேபோன்று திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் ஆர்வத்துடன் விருப்ப மனுக்களை வழங்கினர். மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தங்கள் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்றும் விருப்பம் தெரிவித்து நிறைய பேர் விருப்ப மனு அளித்தனர். 14 நாட்கள் நடந்த விருப்பமனு விநியோகத்தில் மொத்தம் 15,372 விருப்ப மனுக்கள் வந்தன. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தங்கள் தொகுதியில் போட்டியிட வேண்டும் என 1,473 விருப்ப மனுக்கள் அளிக்கப்பட்டன.

இந்நிலையில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் இருந்து மார்ச் 17ம் தேதி (நேற்று) முதல் நேர்காணல் நடைபெறும் என்று பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்து இருந்தார். அதன்படி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேர்காணல் நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட 30 சட்டமன்ற தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடந்தது.

திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் நேர்காணலை நடத்தினார். அப்போது பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச்செயலாளர் கே.என்.நேரு, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, புதுச்சேரி மாநில தேர்தல் பொறுப்பாளர் ஜெகத்ரட்சகன் எம்பி ஆகியோர் உடனிருந்தனர்.

நேர்காணலில் புதுச்சேரியில் உள்ள வில்லியனூர், முத்தியால்பேட்டை, உப்பளம், உழவர்கரை, நெல்லித்தோப்பு உள்ளிட்ட 30 தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்த சுமார் 120 பேர் பங்கேற்றனர். விருப்ப மனு அளித்த அனைவரையும், தொகுதி வாரியாக அழைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேர்காணல் செய்தார். நேர்காணலில் முதலில் தங்கள் சுயவிவரங்களை சொல்லும்படி முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டார். அப்போது ஒவ்வொருவரும் தங்களது படிப்பு, வயது உள்ளிட்ட விவரங்களை தெரிவித்தனர்.

தொடர்ந்து உங்கள் தொகுதி மாவட்ட செயலாளர் யார்? உங்கள் தொகுதியில் தீர்க்கப்பட்டுள்ள பிரச்னைகள் எனன?. தீர்க்கப்படாத பிரச்னைகள் என்ன?. திமுகவின் பலம் மற்றும் பலவீனம் என்ன?. தொகுதிகளில் மற்ற கட்சிகளின் செல்வாக்கு எப்படி இருக்கிறது?. திமுகவில் எத்தனை வருடமாக இருக்கிறீர்கள்?. கட்சியில் வகித்துள்ள பொறுப்புகள் என்னென்ன?. கட்சிக்கான என்னென்ன பணிகள் ஆட்சி உள்ளீர்கள்?. திமுக நடத்திய போராட்டங்களில் பங்கேற்று சிறை சென்ற அனுபவம் உண்டா என்பது உள்பட அடுக்கடுக்கான கேள்விகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டார்.

தொடர்ந்து நீங்கள் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ள தொகுதிகளில் வாய்ப்பு வழங்கினால், அங்கு வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும்?. மேலும் கட்சி தலைமை யாரை வேட்பாளராக நிறுத்தினாலும், அதனை ஏற்றுக்கொள்ளவேண்டும். வெற்றி ஒன்றே நம்முடைய குறிக்கோளாக இருக்க வேண்டும்.

எனவே தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படவேண்டும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் புதுச்சேரி தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து நேர்காணலில் பங்கேற்றவர்களில் பெரும்பாலானோர், புதுச்சேரியில் திமுக தலைமையிலான கூட்டணியை அமைக்கவேண்டும் என்று வலியுறுத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

புதுச்சேரியில் திமுக- காங்கிரஸ் இடையே இன்னும் தொகுதி பங்கீடு நிறைவடையவில்லை. புதுச்சேரியில் கடந்த முறை காங்கிரஸ் கூட்டணியில் 13 சட்டமன்ற தொகுதிகளில் நின்று, திமுக 6 தொகுதிகளில் வெற்றி பெற்று எதிர்க்கட்சியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து 2வது நாளாக இன்று காலை 9 மணிக்கு தூத்துக்குடி திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களுக்கும், மதியம் மதுரை, தேனி, விருதநகர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கும் நேர்காணல் நடக்கிறது.

நாளை மார்ச் 19ம் தேதி காலை கரூர், நாமக்கல், ஈரோடு, கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கும், அன்றைய தினம் மாலை திருப்பூர், திண்டுக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும் நேர்காணல் நடக்கிறது. தொடர்ந்து வருகிற 22ம் தேதி வரை நேர்காணல் நடக்கிறது. நேர்காணல் முடிந்த பின்னர் மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் தவிர மற்ற தொகுதிகளுக்கான திமுக வேட்பாளர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்வு செய்து அறிவிப்பார்.

நேற்று முன்தினம் சென்னையில் நடந்த திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில்,‘‘வேட்பாளர் தேர்வு, யாருக்கு எந்த தொகுதியை ஒதுக்க வேண்டும் என அனைத்தையும் நான் பார்த்துக்கொள்கிறேன். அவரை பிடித்தால் சீட் கிடைக்கும், இவரை பிடித்தால் சீட் கிடைக்கும் என நேரத்தையும் உழைப்பையும் யாரும் வீணாக்க வேண்டாம் மக்களுக்கு பிடித்தவர்களுக்கு மட்டுமே இம்முறை சீட். வெற்றிவாய்ப்புள்ள உறுதியாய் வெற்றி பெறும் ஆற்றல் உள்ளவர்களுக்கு மட்டுமே சீட்’’ என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: