ரம்ஜான் பண்டிகையையொட்டி வாடிப்பட்டி, திருப்புவனத்தில் ரூ.3.5 கோடிக்கு ஆடு விற்பனை

வாடிப்பட்டி: ரம்ஜான் பண்டிகையையொட்டி வாடிப்பட்டி, திருப்புவனம் வாரச்சந்தையில் ரூ.3.5 கோடிக்கு ஆடு விற்பனையாயின. உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் போட்டி போட்டு ஆடுகளை வாங்கிச் சென்றனர். மதுரை மாவட்டம், வாடிப்பட்டியில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை கால்நடை சந்தை நடைபெறும். காலை 6 மணி முதல் 9 மணி வரை ஆடு, கோழி விற்பனை செய்யப்படும். அதன்பின் காய்கறி சந்தை நடைபெறும். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் வியாபாரிகளும், அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து வரும் வியாபாரிகளும் ஆடு, கோழிகளை வாங்கிச் செல்வர்.

இந்நிலையில், வரும் 21ம் தேதி ரம்ஜாண் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், இன்று காலை கூடிய சந்தை களைகட்டியது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் தாங்கள் வளர்த்த வெள்ளாடு, செம்மறி ஆடுகள், மாடுகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் குவிந்தனர். குறிப்பாக இன்று ஆடு விற்பனை அமோகமாக இருந்தது. 10 கிலோ ஆடு ரூ.9 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை விற்பனையானது. வியாபாரிகள் போட்டி போட்டு ஆடுகளை வாங்கிச் சென்றனர். இதேபோல கோழி விற்பனையும் நடைபெற்றது.இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘வாடிப்பட்டி வாரச்சந்தையில் வழக்கமாக ரூ.50 லட்சம் முதல் ரூ.80 லட்சம் வரை விற்பனை இருக்கும். வரும் 21ம் தேதி ரம்ஜான் பண்டிகை என்பதால் இன்று ஆடு மற்றும் கோழி விற்பனை அதிகளவில் இருந்தது. ஆடுகள் மட்டும் ரூ.2 கோடிக்கு விற்பனையாகியது’ என்றனர்.

திருப்புவனத்தில் ரூ.1.5 கோடிக்கு ஆடு விற்பனை;
சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் சந்தை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு ஆடு, மாடு, கோழி ஆகியவை விற்பனை செய்யப்படும். சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் ஆடு, கோழி, மாடுகளை இந்த சந்தைக்கு கொண்டு வருவர். உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் வந்து வாங்கிச் செல்வர். சிவராத்திரி, தீபாவளி, ரம்ஜான், பக்ரீத், கிறிஸ்துமஸ் உள்ளிட்ட விஷேச காலங்களில் சந்தை களைகட்டும். இந்நிலையில், வரும் 21ம் தேதி ரம்ஜான் கொண்டாடப்பட உள்ளதால், இன்று காலையிலேயே சந்தை களைகட்டியது. ஆடுகள் எடைக்கு தக்க விற்பனையாயின. 5 கிலோ வான்கோழி ரூ.7500 வரையும், நாட்டுக்கோழி, சேவல் ரூ.1000 முதல் ரூ.1500 வரையும் விற்பனையாயின. 10 கிலோ ஆடு ரூ.10 ஆயிரம் வரை விற்பனையாயின. இன்று மட்டும் ரூ.1.5 கோடிக்கு ஆடு, கோழி விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து வியாபாரி ஒருவர் கூறுகையில், ‘தேர்தல் கமிஷன் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் கொண்டு வந்தால் பறிமுதல் செய்கிறார்கள். இதனால், அதிகளவில் வியாபாரிகள் வரவில்லை. முக்கிய விஷேச காலங்களில் 5000 ஆடுகள் விற்பனையான நிலையில் இன்றும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனையாயின. கடந்தாண்டு ரம்ஜான் விற்பனை போல இல்லை’ என்றார்.

Related Stories: