பல மாதங்கள் தாமதத்திற்கு பிறகு கீழடி உள்பட 8 இடங்களில் அகழ்வாராய்ச்சிக்கு அனுமதி: திமுகவின் விடாமுயற்சிக்கு கிடைத்த வெற்றி: கீழடி ஆய்வறிக்கையையும் வெளியிட வைப்போம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் சூளுரை

 

சென்னை: பல மாதங்கள் தாமதத்திற்கு பிறகு கீழடி உள்ளிட்ட 8 இடங்களில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள மாநில தொல்லியல் துறைக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும், இது திமுகவின் விடாமுயற்சிக்கு கிடைத்த வெற்றி எனவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

தமிழகத்தின் நாகரிகம் எவ்வளவு பழமையானது என்பதை உலகிற்கு உணர்த்தியதில் அகழ்வாராய்ச்சிகளுக்கு முக்கிய பங்குண்டு. குறிப்பாக, சிவகங்கை மாவட்டம் கீழடியில் கண்டறியப்பட்ட பொருட்கள், தமிழர்கள் 2,600 ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிடப்பட்ட நகர நாகரிகத்துடன் வாழ்ந்ததை உறுதி செய்தன.

அதேபோல், வைகை நதிக்கரையில் அமைந்துள்ள கீழடியில் இதுவரை பத்து கட்டங்களாக அகழ்வாராய்ச்சிகள் நடைபெற்றுள்ளன. அங்கு கண்டெடுக்கப்பட்ட செங்கல் கட்டுமானங்கள், சுடுமண் குழாய்கள் மூலம் அமைக்கப்பட்ட வடிகால் வசதி, தமிழி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் மற்றும் உலக நாடுகளுடன் கொண்டிருந்த வணிக தொடர்புகள் ஆகியவை சங்க காலத் தமிழர்களின் அறிவாற்றலுக்குச் சான்றாக உள்ளன.

அதன்படி, கீழடியில் 11வது கட்டம், ஆதிச்சனூர், நாகப்பட்டினம் உள்பட 8 இடங்களில் அகழ்வாராய்ச்சி செய்ய ஒன்றிய தொல்லியல் துறையிடம் தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் ஒப்புதல் வேண்டி கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. மேலும், “தமிழ்நாட்டில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள உகந்த காலம் ஜனவரி முதல் ஜூலை வரைதான்.

இதை தவறவிட்டால் பருவ மழையால் களப்பணிகள் தடைப்படும். முக்கிய ஆராய்ச்சிகளும் தாமதமாகும். 2025-26ம் ஆண்டுக்கு ஒதுக்கப்பட்ட நிதியும் வீணாகும். தமிழ் நாகரிகத்தின் தொன்மை என்பது இந்தியாவின் நாகரிக பண்பாட்டுக்கு பெருமை சேர்ப்பது. எனவே, அகழ்வாராய்ச்சிக்கு ஒன்றிய அரசு உடனே ஒப்புதல் வழங்க வேண்டும்” என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார்.

இந்நிலையில் பல மாத தாமதத்திற்கு பிறகு தமிழ்நாடு தொல்லியல் துறையின் கோரிக்கையை ஏற்று, ஒன்றிய தொல்லியல் துறை அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, கீழடி – சிவகங்கை, பட்டிணமருதூர் – தூத்துக்குடி, கரிவலம்வந்தநல்லூர் – தென்காசி, மணிக்கொல்லை – கடலூர், ஆதிச்சனூர் – விழுப்புரம், வெள்ளலூர் – கோயம்புத்தூர், தெலுங்கனூர் – சேலம், நாகப்பட்டினம் உள்ளிட்ட 8 இடங்களுக்கு அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே, தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் 5 இடங்களில் அகழ்வாராய்ச்சி நடைபெற்று வரும் சூழலில், தற்போதைய 8 இடங்களையும் சேர்த்து 13 இடங்களில் அகழ்வாராய்ச்சி நடைபெற உள்ளது. இந்த 11ம் கட்ட ஆய்வுகள் மூலம், தமிழர்கள் ரோம், சீனா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் கொண்டிருந்த வணிகத் தொடர்புகள் மேலும் வலுவான ஆதாரங்களுடன் உறுதிப்படுத்தப்படும். குறிப்பாக, மணிக்கொல்லை மற்றும் பட்டிணமருதூர் போன்ற இடங்களில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள், தமிழர்களின் கைவினைத் தொழில் மற்றும் கடல்சார் வல்லமையை உலகுக்குச் சொல்லும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

இந்த அனுமதி குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:‘‘தொடர் அழுத்தத்தாலும், கடிதங்களாலும் கீழடி உள்ளிட்ட 8 இடங்களில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்வதற்கான ஒன்றிய அரசின் ஒப்புதலைப் பெற்றுள்ளோம். பல மாதங்கள் தாமதத்துக்கு பின்பு, நமது விடாமுயற்சிக்கு கிடைத்த வெற்றி இது. அடுத்து, ஒன்றிய பா.ஜ. அரசு வெளியிடாமல் நிறுத்தி வைத்திருக்கும் கீழடி ஆய்வறிக்கையையும் வெளியிட வைப்போம்’’இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: