சென்னை: நான் அரசியலுக்கு வராததற்கு திமுகவின் மிரட்டல் தான் காரணம் என தமிழக வெற்றிக் கழக நிர்வாகி ஆதவ் அர்ஜூனா பேசியதற்கு நடிகர் ரஜினிகாந்த் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். காலம் பேசாது, காலம் பதில் சொல்லும் என்று மறைமுகமாக எச்சரிக்கையும் செய்துள்ளார். இது தமிழக அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் சமீபத்தில் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது, சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய ஆதவ் அர்ஜுனா, விஜய்யை புகழ்வதாக நினைத்து, நடிகர் ரஜினியை மட்டம் தட்டி பேசியிருந்தார். அதாவது அரசியலில் ஜொலிக்க வேண்டுமென வந்த ரஜினிகாந்தை மிரட்டி அரசியலுக்கு வர விடாமல் திமுகவினர் தடுத்து விட்டனர். அவரும் தற்போது ரெட் ஜெயண்ட் தயாரிப்பில் நடிக்க சென்று விட்டார்.
ஆனால் நம்முடைய தலைவர் விஜய்யை அதுபோல் மிரட்ட முடியாது. அவர் மன வலிமை மிக்கவர் என பேசியிருந்தார். அவருடைய இந்த கருத்துக்கு கடுமையான எதிர்ப்புகள் எழுந்தது. ரஜினி ரசிகர்கள் மட்டுமல்லாமல் அரசியல் கட்சியை சார்ந்தவர்களும் ஆதவ் அர்ஜுனா பேச்சை விமர்சனம் செய்தனர். ஏற்கனவே நடிகர் ரஜினியின் படத்தை தவறாக விஜய் ரசிகர்கள் விமர்சனம் செய்து வந்தனர். அதோடு ரஜினி படம் வெளியாகும் நேரத்தில் தியேட்டருக்கு விஜய்யின் ரசிகர்கள் சென்று படம் பார்த்து விட்டு, வெளியில் வந்து படம் சரியில்லை என்று வேண்டும் என்றே பேட்டியளித்து வந்தனர். இதனால் பல இடங்களில் இரு தரப்புக்கும் மோதல் எழுந்தது.
இந்நிலையில் ஆதவின் இந்த பேச்சைக் கண்டித்த பல்வேறு அரசியல் கட்சியினர், அவரை யாரும் அப்படியெல்லாம் மிரட்ட முடியாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர். நடிகர் ரஜினிகாந்த் குறித்த தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகி ஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு கண்டனங்கள் கடுமையாக வலுத்து வருகிறது. தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பலர் ஆதவ் அர்ஜூனா பேச்சுக்கு தங்களது கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ளவர்கள் தொடர்ச்சியாக அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து கொண்டிருப்பதும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பி வருகிறது. கூட்டணிக்காக எதிர்பார்த்து காத்திருந்த அதிமுக, பாஜ நிர்வாகிகள், கூட்டணி இல்லை என்றதும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். எடப்பாடி பழனிசாமி, வேலுமணி மற்றும் நயினார் நாகேந்திரன் ஆகியேரும் கண்டனங்களை தெரிவித்திருந்தனர்.
அதேபோன்று, ஆதவ் அர்ஜுனாவின் பேச்சு அவரது ரசிகர்களை கொந்தளிக்க வைத்துள்ளது. இதனை கண்டித்து மதுரை ரஜினிகாந்த் ரசிகர்கள் கடுமையாக சாடி போஸ்டர் ஒட்டினர். அந்த வகையில் மதுரையில் இந்த சம்பவம் தொடர்பாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. மதுரை மாநகர் மாவட்ட தலைமை ரஜினிகாந்த் ரசிகர்கள் நலச்சங்கம் என்ற பெயரில் இருக்கும் இந்த போஸ்டரில், \\”காக்கா குஞ்சுகளுக்கும் கள்ள சீட்டுக்கும் பதில் சொல்லும் நிலைமைக்கு தள்ளப்பட்டு விட்டோம் தலைவா. வேதனை, வெட்கம், அவமானம். காலம் பேசாது. நிச்சயம் பதில் சொல்லும். களத்தில் சந்திப்போம். கதம் கதம்’’ என அந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வெளியாகி தீயாய் பரவி வருகிறது. ரஜினி அரசியலுக்கு வர போவதில்லை என அறிவித்ததில் இருந்து சினிமாவில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார். ஆனால் தற்போது மீண்டும் அரசியல் வட்டாரத்தில் ரஜினி சம்பந்தமான பேச்சு அதிகரிக்க தொடங்கியுள்ளது.
ஏற்கனவே அரசியலில் கத்துக்குட்டியாக இருக்கக்கூடிய ஆதவ் அர்ஜூனா பொது மேடைகளில் என்ன பேசுகிறோம் என்றே தெரியாமல் அரைவேக்காட்டு தனமாக பேசிய அரசியல் தலைவர்களை விமர்சிப்பதாக அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. பணம் இருந்தால் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்ற போக்கிலேயே அவரது நடவடிக்கை இருப்பதாகவும் அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் பற்றிய அவரது விமர்சனம் அவர் மீதும், அவரை கண்டிக்காத விஜய் மீதும் பொதுமக்கள் கொந்தளிப்பில் இருப்பதாக கூறப்படுகிறது.
இப்படியான நிலையில் ரஜினி தனது சமூக வலைத்தள பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “தவெக கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் ஆதவ் அர்ஜுனா சமீபத்தில் என்னைப் பற்றி உண்மைக்கு மாறான ஒரு கருத்தைத் தெரிவித்திருந்தார். அவருடைய அவதூறு கருத்தைக் கண்டித்து, எனக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த தமிழக சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர் எல்.முருகன், தமிழக அமைச்சர் ரகுபதி, தொல்.திருமாவளவன், எஸ்.பி.வேலுமணி, அண்ணாமலை, அர்ஜுனமூர்த்தி, அன்புமணி ராமதாஸ், ஜி.கே.வாசன், ஜான் பாண்டியன், புகழேந்தி மற்றும் பல கட்சி அரசியல் தலைவர்கள், அமீர், ஜி.தனஞ்சயன் மற்றும் திரையுலக நண்பர்கள், மற்றும் ஊடகத்துறையினர், என்னை வாழவைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
”காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்” வாழ்க தமிழ்நாடு! வளர்க தமிழக மக்கள்!! ஜெய்ஹிந்த்!!!” என அதில் ரஜினி தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்தின் இந்த அறிக்கை தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் ரஜினி காந்த், காலம் பேசாது, ஆனால் காத்திருந்து பதில் சொல்லும் என்று சொல்லியிருப்பது தேர்தலில் தனது ரசிகர்கள் இதற்கு தக்க பதிலடியை கொடுப்பார்கள் என்பதை எச்சரிக்கும் வகையில் அவர் கூறியிருப்பதாக ரஜினி ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.
