சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையிலான கே.என்.நேரு, திருச்சி சிவா, ஆ.ராசா, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், ஆர்.எஸ்.பாரதி ஆகிய 7 பேர் அடங்கிய தொகு பங்கீட்டு குழுவுடன், மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம் தலைமையிலான குழுவினர் 3வது கட்டமாக நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
பின்னர் மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.சண்முகம் அளித்த பேட்டி: மார்க்சிஸ்ட் சார்பில் கடந்த சட்டசபை தேர்தலின் போது போட்டியிட்ட எண்ணிக்கையை விட கூடுதலான தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்கிற கோரிக்கையை வற்புறுத்தி இருக்கிறோம். நிறைய கட்சிகள் இருக்கின்ற காரணத்தால் பேச்சுவார்த்தை என்பது இன்னும் உடனடியாக முடிவுக்கு வருவதில் சிரமங்கள் இருக்கிறது. மீண்டும் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெறும். ஒரு சமூகமான முறையில் வரும் 30ம் தேதி தான் வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது.
தமிழ்நாட்டிற்கு போதுமான அவகாசம் என்பது இருக்கிறது. அனேகமாக அடுத்த ஓரிரு நாட்களுக்குள் தொகுதி உடன்பாடு தொடர்பாக அனைத்துமே நிறைவு பெறும் என்று நாங்கள் கருதுகிறோம். கடந்த முறை போட்டியிட்டதை விட கூடுதல் தொகுதியில் போட்டியிட வேண்டும். அதற்குரிய முறையில் இந்த எண்ணிக்கை உயர்த்தப்பட வேண்டும் என்று சொல்லியிருக்கிறோம். அதில் உறுதியாக இருப்பதால் தான் பேச்சுவார்த்தை தொடர்ந்து நீடித்து வருகிறது. ஒவ்வொரு கட்சியும் அதன் பலத்துக்கு ஏற்ப தொகுதிகளைப் பெறுகின்றனர். எனவே காங்கிரஸ் கூடுதல் தொகுதிகளைப் பெற்றது பற்றி கவலை இல்லை. மார்க்சிஸ்ட் கட்சி தன்னுடைய பலத்துக்கு ஏற்ப கூடுதல் தொகுதிகளை எதிர்பார்க்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
