சென்னை: தமிழக வெற்றிக் கழகம் சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் நிலையில் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் தேர்வில் தீவிரம் காட்டி வரும் புஸ்சி ஆனந்த், நேற்று 2வது கட்ட வேட்பாளர் பட்டியலை தயாரிக்கும் பணியைத் தொடங்கியுள்ளார். கடந்த வாரம் விஜய் முன்னிலையில், தவெக சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்பமனு கொடுத்தவர்களுக்கான முதல்கட்ட நேர்காணல் நடைபெற்றது. அதில், முதல்கட்டமாக 60 வேட்பாளர்களை இறுதி செய்தார் விஜய்.
குறிப்பாக, முக்கிய நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், நீண்ட காலமாக விஜய் ரசிகர் மன்றத்தில் பயணிப்பவர்கள் உள்ளிட்டவர்களுக்கு நேர்காணல் நடத்தப்பட்டு வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டனர். அந்தவகையில், இரண்டாம் கட்டமாக வேட்பாளர்களை இறுதி செய்யும் வகையில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் தலைமையில் நேற்று இரண்டாம் கட்ட நேர்காணல் பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடந்தது. இந்த நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படும் வேட்பாளர் பட்டியலை விஜய் விரைவில் இறுதி செய்வார் என்று தவெக தரப்பில் கூறப்படுகிறது.
