சென்னை: தொகுதி பங்கீட்டை நிறைவு செய்யும் பணியை திமுக வேகப்படுத்தி வரும் நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முரண்டு பிடித்து வருவது நியாயமா என்பது அரசியல் நோக்கர்களின் கேள்வியாக உள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ம்தேதி நடைபெற உள்ள நிலையில், திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தொகுதி பங்கீட்டை இறுதி செய்யும் பணிகளில் வேகம் காட்டி வருகின்றன.
இந்த தேர்தலில் வலுவான கட்டமைப்பை ஏற்படுத்தியுள்ள திமுக கூட்டணியில், காங்கிரஸ் கட்சியுடனான பேச்சுவார்த்தை இழுபறிக்கு பின் சுமுகமாக முடிவுக்கு வந்தது. காங்கிரசுக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் முஸ்லிம் லீக் கட்சிக்கு 2, மமகவுக்கு 2, மதிமுகவுக்கு 4, கொமதேகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுவிட்டன. தேமுதிக பரவலாக அனைத்து தொகுதிகளிலும் அனைத்து சமூகத்தினரையும் கொண்ட கட்சியாக இருப்பதால் ஏற்கனவே 10 தொகுதிகளை ஒதுக்க திமுக முடிவு செய்துள்ளது.
இவ்வாறு கிட்டத்தட்ட தொகுதி பங்கீட்டை திமுக இறுதிபடுத்தி வரும் நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டும் முரண்டு பிடிப்பது திமுக கூட்டணி கட்சியினர் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது திமுக கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. அதில் மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலா 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. தலா 4 தொகுதிகளில் தோல்வியை தழுவின.
இப்போது திமுக கூட்டணிக்கு தேமுதிக, மநீம, மஜக, எஸ்டிபிஐ உள்ளிட்ட புதிய கட்சிகள் வந்துள்ளன. இதை கருத்தில் கொண்டு கடந்த முறை கூடுதல் தொகுதிகளை பெற்ற கட்சிகள் எல்லாம் தங்களுக்கான தொகுதிகளை குறைத்து கொண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு வருகின்றன.
மதிமுக கடந்த தேர்தலில் 6 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில் 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
ஆனால் இந்த தேர்தலில் 2 தொகுதிகளை விட்டு கொடுத்து 4 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 3 தொகுதிகளில் போட்டியிட்டு மூன்றிலும் தோல்வியடைந்தது. ஆனாலும் இந்த முறை 2 தொகுதிகளில் போட்டியிடுகிறது. கொமதேகவுக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு ஒன்றில் வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் ஒன்றை விட்டு கொடுத்து, 2 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
இப்படி கூட்டணி கட்சிகள் எல்லாம் தங்களுக்கான தொகுதிகளை விட்டு கொடுத்து அடம் பிடிக்காமல் தங்களுக்கான தொகுதிகளை இறுதி செய்து வருகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மட்டும் கூடுதல் தொகுதிகளை கேட்டு அடம்பிடித்து வருவது திமுக கூட்டணி கட்சியினர் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தி வருவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திமுக 5 இடங்களை கொடுக்க முன்வந்துள்ளது. கடந்த தேர்தலைப் போலவே 6 தொகுதிகளைக் கேட்ட நிலையில், புதிய கட்சிகள் கூட்டணியில் இணைந்துள்ளதால் ஏற்பட்டிருக்கும் நெருக்கடியை திமுக சுட்டிக்காட்டியது. இதனையடுத்து 5 தொகுதிகளை ஏற்கும் மனநிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இருக்கிறது. அதே நேரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியோ, கடந்த தேர்தலில் கொடுக்கப்பட்ட 6 தொகுதிகளை விட கூடுதலான தொகுதிகளை ஒதுக்க கோரி வருகிறது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் ஏற்பட்டிருக்கும் இக்கட்டமான சூழலை சுட்டிக்காட்டியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர்களோ, கூட்டணிக்கு புதியதாக வந்த தேமுதிகவுக்கு 10 தொகுதிகளை ஒதுக்கும் நிலையில் தங்களுக்கும் கூடுதலான தொகுதிகள் வேண்டும் என்று முரண்டு பிடிப்பது கூட்டணி கட்சியினர் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்துவதாக உள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
2016ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின் போது மக்கள் நலக் கூட்டணியை உருவாக்கி, அந்த மக்கள் நலக் கூட்டணிக்கு தலைமை தாங்கியது தேமுதிக. இந்த கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த். அந்த தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியில் தேமுதிக 104 இடங்களில் போட்டியிட்டது. அந்த கட்சியின் கீழ் தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட்டது. அவர்களுக்கு எப்படி இப்போது தேமுதிகவை விட கூடுதல் தொகுதிகளை ஒதுக்க முடியும் என்பதுதான் கூட்டணி கட்சியினரின் கேள்வியாக உள்ளது.
கம்யூனிஸ்ட் கட்சியை பொறுத்தவரை தமிழகத்தில் குறிப்பிட்ட தொகுதிகளில் தான் செல்வாக்கு உள்ளது. தேமுதிகவை பொறுத்தவரை மாநிலம் முழுவதும் செல்வாக்கு உள்ளது. குறிப்பாக தூத்துக்குடி, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், கடலூர், விழுப்புரம், வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம் என வட மற்றும் தென் மாவட்டங்களிலும் தொகுதி வாரியாக செல்வாக்கு உள்ளது. அப்படி இருக்கும் போது தேமுதிகவை விட கூடுதல் தொகுதிகளை ஒதுக்க கேட்டு பிடிவாதம் பிடிப்பது தொகுதி பங்கீட்டை இறுதிபடுத்துவதில் கால தாமதம் ஏற்படுத்துவதாக சொல்லப்படுகிறது.
2016 தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியால் அப்போதைய தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை. இதன் பின்னர் கடந்த 2021 தேர்தலில் மதிமுக, விசிக, சிபிஐ, சிபிஎம் கட்சிகள் திமுக கூட்டணியில் இணைந்தன. அதே கூட்டணியில் தொடருகின்றன. இந்த 2026 தேர்தலில் திமுக கூட்டணியில் தேமுதிக இடம் பெற வேண்டும் என விருப்பம் தெரிவித்து பேட்டிகளை கொடுத்தவர்கள், திமுக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளின் தலைவர்கள் தான். தேமுதிக கூட்டணியில் இணைந்த போது வெளிப்படையாக வரவேற்றவர்களும் இவர்கள் தான்.
இத்தேர்தலில் திமுக கூட்டணியில் 9 புதிய கட்சிகள் இணைந்துள்ளன. இதனால் திமுக கூட்டணியில் ‘இடநெருக்கடி’ ஏற்பட்டிருப்பது இயல்பானது ஒன்று தான். இந்த யதார்த்தத்தின் அடிப்படையில் தான் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் திமுக, கடந்த தேர்தலில் போட்டியிட்ட இடங்களை விட குறைவான எண்ணிக்கையில் போட்டியிட இருக்கிறது.
ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியோ, அதெப்படி தேமுதிகவைவிட எங்களுக்கு குறைவான இடங்களா? என பேசுவதில் எந்த லாஜிக்கும் இருப்பதாக தெரியவில்லை என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். எனவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கான ஒப்பந்தம் கையெழுத்தானால், திமுக கூட்டணியில் கிட்டத்தட்ட தொகுதி பங்கீடு வேகமாக முடிந்து விடும் என்கிறார்கள். இவ்வாறான சூழ்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிடிவாதம் கூட்டணி கட்சியினர் மத்தியில் வருதத்ததை ஏற்படுத்துகிறது என்பதே அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது.
* 6ல் 4 எம்பிக்கள் தமிழ்நாட்டிலிருந்து தேர்வானவர்கள்
1996ம் ஆண்டு கலைஞரும், மூப்பனாரும் அமைத்த கூட்டணியில் நல்லகண்ணு தலைமையிலான இந்திய கம்யூனிஸ்ட் இடம் பெற்றது. ஆனால் மார்க்சிஸ்ட் இடம் பெறவில்லை. விளைவு, மார்க்சிஸ்ட்டுக்கு சட்டமன்றத்தில் ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. அதே போன்ற நிலை தான் 2016ல் மக்கள் நலக் கூட்டணி அமைத்த போதும் அக்கட்சிக்கு நிகழ்ந்தது. சட்டென்று நிதானித்துக் கொண்டு திருத்திக்கொள்ளக்கூடிய தன்மையை இடதுசாரிகள் பெற வேண்டியது இன்றைய காலத்தின் மிக முக்கிய அவசியம்.
இன்று இந்தியாவில் 6 இடதுசாரி எம்.பி.க்கள் தான் லோக்சபாவில் இருக்கிறார்கள். அதில் 4 பேர் தமிழ்நாட்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டியது அவசியம். இதை நினைவில் கொண்டால் இதுபோன்ற கோரிக்கைகளுக்கு இடம் இருக்காது. மாமியார் உடைத்தால் மண்பாண்டம், மருமகள் உடைத்தால் பொன்பாண்டம் என்ற பார்வையிலிருந்து சற்று விலகி, இடதுசாரிக் கொள்கைகளுக்கு மேலும் வலுவூட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு எடுக்க வேண்டும் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
