நடிகை குறித்து பேசும் முன் அதே இடத்தில் உங்கள் தாய், சகோதரி, மனைவி, மகள் இருந்தால் இப்படி பேசுவீர்களா? சி.வி.சண்முகத்துக்கு நடிகை குஷ்பு ஆவேசம்

 

சென்னை: நடிகை குறித்து பேசும் முன் அதே இடத்தில் உங்கள் அம்மா, தங்கை, மனைவி, மகள் இருந்தால் இப்படி பேசுவீர்களா? என்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு நடிகை குஷ்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ஆர்ப்பாட்டத்தில், நடிகை நயன்தாரா குறிப்பிட்டு சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். சி.வி.சண்முகத்தின் அரசியல் நாகரிகமற்ற இந்த பேச்சுக்குப் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவும் சி.வி.சண்முகத்தின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

அதாவது தமிழக பாஜக துணைத் தலைவர் நடிகை குஷ்பு தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். இது தொடர்பாக நடிகை குஷ்பூ வெளியிட்டிருக்கும் பதிவு: பெண்கள், குறிப்பாக நடிகைகள் யாருடைய சொத்தும் கிடையாது. ஒரு நடிகையின் பெயர் மலிவான நகைச்சுவைகளுக்கோ, அற்பமான அவதூறுகளுக்கோ அல்லது ஒருவரின் வாதத்தை நியாயப்படுத்துவதற்கான கருவியோ கிடையாது.

ஒரு பெண்ணின் அடையாளத்தைப் பயன்படுத்தி மற்றவர்களை கேலி செய்வதும் அல்லது ஒரு கருத்தை நிரூபிக்க முயல்வதும், பேசுபவரின் மனநிலையையும் வளர்ப்பையுமே வெளிப்படுத்துகிறது. இதுவே போதும், இதற்கு மேல் பொறுத்துக்கொள்ள முடியாது. இந்த உலகில் ஒவ்வொரு ஆணும் ஒரு பெண்ணிடமிருந்தே பிறக்கிறார். ஒரு நடிகையைப் பற்றி சாதாரணமாகக் கருத்து தெரிவிக்கும் முன் உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். இதே உதாரணம் உங்கள் தாய், சகோதரி, மனைவி, மகள் அல்லது உங்கள் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவராக இருந்தால் நீங்கள் இதேபோல் பேசுவீர்களா என்று?.

ஒரு நடிகை பொது வாழ்வில் அறியப்பட்டவராக இருக்கலாம், ஆனால் அவர் பொதுச்சொத்து அல்ல. மற்ற துறைகளில் உள்ள பெண்களுக்கு நீங்கள் அளிக்கும் அதே மரியாதையை பெண் நடிகைகளுக்கும் கொடுங்கள். இப்படியான தரம் தாழ்ந்த விமர்சனங்களைச் செய்பவர்கள், தாங்கள் பேசும் பெண்ணுக்கு அவமானத்தை தேடித்தருவதில்லை. மாறாக, தங்களுடைய குறுகிய மனப்பான்மையையும், தவறான வளர்ப்பையும், அடிப்படை மனிதநேயமற்ற தன்மையையுமே வெளிச்சம் போட்டுக் காட்டிக்கொள்கிறார்கள். இது வெறும் அவமரியாதை மட்டுமல்ல, இது மனிதகுலத்திற்கே ஒரு அவமானம். இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: