மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் எட்டாம் கொடை தொடங்கியது

குளச்சல்: குமரி மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற கோயில்களில் மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலும் ஒன்று. கேரளம் பெண் பக்தர்கள் இருமுடி கட்டி இங்கு வந்து அம்மனை வழிபடுவதால் இந்த கோயில் பெண்களின் சபரிமலை என்றழைக்கப்படுகிறது. இங்கு மாசிக் கொடை விழா கடந்த 1ம் தேதி திருக்கொடியேற்றத்துடன் தொடங்கி 10 ம் தேதி நள்ளிரவு ஒடுக்கு பூஜையுடன் நிறைவடைந்தது. இதில் குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்ட பக்தர்கள் மற்றும் கேரளம் மாநில பக்தர்கள் திராளாக கலந்து கொண்டனர். இதையடுத்து இன்று (செவ்வாய்க்கிழமை) எட்டாம் கொடை நடக்கிறது. அதை முன்னிட்டு இன்று காலை 4.30 மணிக்கு திருநடை திறப்பட்டது. 5 மணிக்கு கணபதி ஹோமம், 6.30 க்கு உஷ பூஜை, 1 மணிக்கு உச்சி கால பூஜை ஆகியவை நடந்தது.

அதைத்தொடர்ந்த மாலை 6.30 க்கு உஷ பூஜை, இரவு 8.30 மணிக்கு அத்தாழ பூஜை ஆகியவை நடக்கிறது. எட்டாம் கொடையை முன்னிட்டு குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் கேரளம் பக்தர்களும் மண்டைக்காட்டில் குவிந்து பொங்கலிட்டனர். களியக்காவிளை, மார்த்தாண்டம், தக்கலை, குமாரகோவில் ஆகிய பகுதிகளிலிருந்து மண்டைக்காட்டிற்கு சிறப்பு பேரூந்துகள் இயக்கப்பட்டது. இதனால் கோயில் வளாகம், கடற்கரை, பொங்கலிடும் பகுதி ஆகிய பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. தொடர்ந்து வரும் 22ம் தேதி மீன பரணி கொடை நடக்கிறது. அன்று நள்ளிரவு வலிய படுக்கை பூஜை நடக்கிறது.

Related Stories: