அனைத்துக்கட்சி தலைவர்களின் கோரிக்கைகள் ஏற்பு: மறைந்த தலைவர்கள் சிலையை மூட தேவையில்லை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு

 

சென்னை: தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், அரசியல் தலைவர்களின் சிலைகள், படங்கள் மற்றும் பெயர் பலகைகள் அகற்றுவது குறித்து எவ்வாறு செயல்பட வேண்டும் என்ற கேள்வி எழுந்தது. சில இடங்களில் சிலைகள் மூடப்பட்டது.

அதேபோன்று, பொதுத்தளங்களில் அமைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சி தலைவர்களின் சிலைகள் தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்தக் கூடும் என்ற காரணத்தால், அவற்றை மறைக்கும் நடைமுறை சில இடங்களில் கடந்த தேர்தல்களில் பின்பற்றப்பட்டிருந்தது. இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் நேற்று முன்தினம் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

இதில், திமுக, அதிமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் தங்களது கருத்துகளை முன்வைத்தன. குறிப்பாக, ‘ஏற்கனவே மறைந்த தலைவர்களின் சிலைகளை மறைப்பது தேவையற்ற நடவடிக்கை’ என்று வலியுறுத்தப்பட்டது. இந்த கோரிக்கைகளை பரிசீலித்த இந்திய தேர்தல் ஆணையம், மறைந்த தலைவர்களின் சிலைகள் தற்போதைய தேர்தல் பிரசாரத்துடன் நேரடி தொடர்பு இல்லாதவை என்பதால் அவற்றை மறைக்க தேவையில்லை என கூறியுள்ளது.

இதையடுத்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் நேற்று அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கும் (கலெக்டர்கள்) சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில், “தலைவர்களின் சிலைகள் எந்த அரசியல் கட்சிக்கும் ஆதரவாக பயன்படுத்தப்படக்கூடாது. அவற்றை சுற்றியுள்ள பகுதிகளில் பிரசார பொருட்கள் வைக்கக் கூடாது. மேலும், உயிருடன் உள்ள அரசியல் தலைவர்களின் படங்கள் அல்லது சிலைகள் அரசாங்க அலுவலகங்கள் அல்லது பொதுத்தளங்களில் இருந்தால், அவை மாதிரி நடத்தை விதிமுறைகளுக்கு உட்பட்டு மறைக்கப்பட வேண்டும்” என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: