ரஜினி, கமல், விஜய், அஜித்துடன் நடித்த காமெடி நடிகர் மயில்சாமி திடீர் மரணம்: முதல்வர் இரங்கல்

சென்னை,: பிரபல தமிழ் காமெடி நடிகர் மயில்சாமி, மாரடைப்பு காரணமாக நேற்று அதிகாலை திடீரென்று மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு திரையுலகினர் மற்றும் அரசியல் பிரமுகர்கள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். கமல்ஹாசனின் ‘நாயகன்’ படத்தில் மேக்கப் அசிஸ்டெண்ட், பிறகு ஸ்டண்ட் உதவியாளர், மிமிக்ரி கலைஞர், டி.வி நிகழ்ச்சி தொகுப்பாளர், காமெடி நடிகர், சமூக சேவகர், அரசியல்வாதி என்று பன்முகங்கள் கொண்டவர், மயில்சாமி (57). சென்னை விருகம்பாக்கத்திலுள்ள வீட்டில் தனது மனைவி கீதா, மகன்கள் அன்பு, யுவன் ஆகியோருடன் வசித்து வந்தார்.

ஏற்கனவே அவருக்கு இதய பாதிப்பு ஏற்பட்டு பைபாஸ் சர்ஜரி செய்யப்பட்டது. பல வருடங்கள் கடந்த நிலையில், 2வது முறையாக அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதை ெதாடர்ந்து சிகிச்சை பெற்று உடல்நிலை தேறினார். இந்நிலையில், மகா சிவராத்திரியையொட்டி கேளம்பாக்கத்தில் உள்ள கோயிலுக்குச் சென்று சாமி கும்பிட்டார்.

அப்போது அதிகாலை 3.30 மணியளவில், மயில்சாமிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு வலியால் துடித்தார். உடனடியாக அவரை போரூரில் இருக்கும் தனியார் மருத்துவ

மனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து மயில்சாமியின் உடல் விருகம்பாக்கத்தில் இருக்கும் வீட்டுக்கு கொண்டு வரப்பட்டு, பொதுமக்கள் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தைச் சேர்ந்த மயில்சாமி, 1965 அக்டோபர் 2ம்  தேதி பிறந்தார். 1984ல் கே.பாக்யராஜ் இயக்கிய ‘தாவணிக் கனவுகள்’ படத்தில் அறிமுகமானார். பிறகு ‘கன்னிராசி’ படத்தில் டெலிவரி பாய் வேடத்தில் நடித்தார். தொடர்ந்து பிரபுவுடன் ‘என் தங்கச்சி படிச்சவ’, கமல்ஹாசனுடன் ‘அபூர்வ சகோதரர்கள்’, ‘வெற்றிவிழா’, ‘மைக்கேல் மதன காமராஜன்’, ரஜினிகாந்துடன் ‘பணக்காரன்’, ‘உழைப்பாளி’, விஜயகாந்துடன் ‘சின்னக்கவுண்டர்’, சத்யராஜுடன் ‘வால்டர் வெற்றிவேல்’, விஜய்யுடன் ‘கில்லி’, அஜித் குமாருடன் ‘ஆசை’, ‘வீரம்’, ‘வேதாளம்’, விக்ரமுடன் ‘தூள்’, ராகவா லாரன்ஸுடன் ‘காஞ்சனா’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதுவரை 200க்கும் மேற்பட்ட படங்களில், தமிழிலுள்ள எல்லா முன்னணி நடிகர், நடிகைகளுடனும் சேர்ந்து காமெடி வேடங்களில் நடித்துள்ளார்.

ராசு மதுரவன் இயக்கிய ‘மாயாண்டி குடும்பத்தார்’ படம் மயில்சாமியை சிறந்த குணச்சித்திர நடிகராக அடையாளப்படுத்தியது. அவர் கடைசி காலத்தில் ‘நெஞ்சுக்கு நீதி’, ‘வீட்ல விசேஷம்’, ‘லெஜண்ட்’ ஆகிய படங்களில் நடித்திருந்தார். அவரது கடைசி படமான ‘உடன்பால்’ ஓடிடியில் வெளியானது. கடந்த 16ம் தேதி ‘விளம்பரம்’ என்ற குறும்படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்று நடித்தார். நேற்று முன்தினம் ‘கிளாஸ்மேட்ஸ்’ என்ற படத்துக்காக அவர் பேசியதுதான் கடைசி டப்பிங்.

ஆன்மீக நாட்டம் கொண்ட மயில்சாமி, சமூக சேவகராகவும் திகழ்ந்தார். ஜெயலலிதா இருந்தபோது அதிமுக சார்பில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். பிறகு 2021ல் விருகம்பாக்கம் சட்டசபை தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். கொரோனா லாக்டவுனில் விருகம்பாக்கம் தொகுதியில் ஏராளமான நலத்திட்ட உதவிகள் செய்தார்.

கவுண்டமணி, செந்தில், விவேக், வடிவேலு, சந்தானம், சூரி, யோகி பாபு, கருணாஸ் உள்பட அனைத்து நகைச்சுவை நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள மயில்சாமி, பல்வேறு டி.வி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். பலகுரல் மன்னனாக திகழ்ந்த அவர், வடிவேலுவுக்கு ‘கஸ்தூரி மஞ்சள்’ படத்திலும், மணிவண்ணனுக்கு ‘செல்வா’ படத்திலும், தெலுங்கு நடிகர்கள் பிரம்மானந்தம் மற்றும் ஆலிக்கு ‘நியூ’ என்ற படத்திலும், ‘உள்ளம் கொள்ளை போகுதே’ படத்திலும் டப்பிங் பேசியிருந்தார்.

தமிழ்த் திரையுலகில் முதல்முறையாக தனியாக மிமிக்ரி கேசட் வெளியிட்டவர், மயில்சாமி. பாரதிராஜா இயக்கத்தில் நடித்த ‘கண்களால் கைது செய்’ படத்துக்காக, சிறந்த நடிகருக்கான தமிழ்நாடு அரசு விருது பெற்றுள்ளார். மயில்சாமியின் மகன்கள் அன்பு, யுவன் ஆகிய இருவரும் சினிமாவில் நடித்து வருகின்றனர். மரணம் அடைந்த மயில்சாமியின் உடல், வடபழநி ஏ.வி.எம் சுடுகாட்டில் இன்று காலை தகனம் செய்யப்படுகிறது.

விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி: அண்ணன் மயில்சாமியின் மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது. சிறந்த குணச்சித்திர நடிகர், எளிய மனிதர்கள் மீது பேரன்பு கொண்டவர், ரசிகர்களின் அன்பைப் பெற்ற அண்ணன் என்றென்றும் நினைவு கூறப்படுவார். அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு ஆதரவையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

தயாநிதி மாறன் எம்பி: பலகுரல் மன்னனாகப் பிரபலமாகி, பிறகு தமிழ்த் திரையுலகில் தனக்கென்று தனி முத்திரை பதித்த  நகைச்சுவை நடிகர் மயில்சாமியின் மறைவுச்செய்தி அறிந்து அதிர்ச்சியுற்றேன். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த்: ‘சின்னக்கவுண்டர்’, ‘தவசி’ போன்ற படங்களில் என்னுடன் நடித்த மயில்சாமி, நகைச்சுவை மட்டுமின்றி, குணச்சித்திர வேடங்களிலும் அசத்தியுள்ளார். இறைவன் சிவன் மீது பற்று கொண்ட மயில்சாமி, மகா சிவராத்திரி அன்று உயிரிழந்துள்ளார்.

மநீம தலைவர் கமல்ஹாசன்: நகைச்சுவை நடிப்பில் தனக்கென்று ஒரு பாணியை முன்னிறுத்தி வெற்றி கண்டவர், நண்பர் மயில்சாமி. உதவும் சிந்தையால் பலராலும் நினைக்கப்படுவார். அன்பு நண்பருக்கு என் அஞ்சலி. மற்றும் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், எர்ணாவூர் நாராயணன், சீமான், டிடிவி தினகரன், இந்திய ஜனநாயக கட்சி தலைவர் ரவி பச்சமுத்து, திருநாவுக்கரசர் எம்பி, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், பாரிவேந்தர் எம்பி, வி.கே.சசிகலா, பாமக தலைவர் அன்புமணி, தென்னிந்திய நடிகர் சங்கம் உள்பட பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

நடிகர் மயில்சாமியின் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், ‘பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி மறைந்தார் என்ற துயர்மிகு செய்தியறிந்து வருந்தினேன். பல குரல்களில் நகைச்சுவையாகப் பேசும் ஆற்றல் படைத்த அவர், தன்னுடைய ஒலிநாடாக்கள் வழியாக தமிழ்நாடு முழுவதும் அறிமுகமானவர். ‘காமெடி டைம்’ நிகழ்ச்சியின் மூலம் தமிழ்நாட்டு மக்களின் இல்லங்களில் ஒருவராகவே பார்க்கப்படுகிற அளவுக்கு அன்பைப் பெற்றவர். கலைஞரின் பாராட்டைப் பெற்றவர். தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில் தன்னுடைய கருத்துகளை ஆழமாகப் பதிவு செய்யக்கூடியவர்.

திரையுலகில் தனக்கென்று ஒரு முத்திரையைப் பதித்த அவரது இழப்பு ஈடுசெய்ய முடியாதது. அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும், திரையுலக கலைஞர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன்: திரைப்பட நகைச்சுவை நடிகர் மயில்சாமி 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து, திரைத்துறையில் தனி முத்திரை பதித்தவர். மேலும் அவர், பலகுரல் மன்னராக திரைத்துறையில் பல கலைஞர்களுக்கு முன்னோடியாக திகழ்ந்தவர்.

மயில்சாமியின் கடைசி ஆசை: மயில்சாமி கடைசியாகப் பங்கேற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட டிரம்ஸ் சிவமணி கூறியதாவது:  நேற்று முன்தினம் மகா சிவராத்திரியையொட்டி, சென்னை கேளம்பாக்கம் மேகநாதீஸ்வரர் கோயிலில் நடந்த நிகழ்ச்சியில் மயில்சாமி மைக் வாங்கி பாடினார். நேற்று அதிகாலை 3 மணி வரை அவருடன் இருந்தேன். நிகழ்ச்சி முடிந்து காரில் சென்றபோது, மயில்சாமிக்கு வாய்ஸ்நோட் அனுப்பினேன். அவரும் எனக்கு வாய்ஸ் மெசேஜ் அனுப்பினார். அதில், மயில்சாமியின் குரல் மிகவும் சோர்வாக இருந்தது.

அதிகாலை 5.30 மணிக்கு மயில்சாமிக்கு போன் செய்யும்போது, அவர் உயிரிழந்தது தெரிந்து அதிர்ச்சி அடைந்தேன். அவர் கடைசியாக என்னிடம் ஒரு விஷயத்தைச் சொன்னார். ‘நடிகர் விவேக் உள்பட பல திரை நட்சத்திரங்களை மேகநாதீஸ்வரர் கோயிலுக்கு அழைத்து வந்திருக்கிறேன். அதுபோல், ரஜினிகாந்த்தை கோயிலுக்கு அழைத்து வந்து, சிவலிங்கம் அருகில் உட்கார வைத்து, அவரது கையால் பால் அபிஷேகம் செய்வதைப் பார்க்க வேண்டும். இதுதான் என் ஆசை’ என்றார்.

Related Stories: