நீலகண்டி

நன்றி குங்குமம் ஆன்மிகம்

திருநீலகண்டம் என்னும் திருப்பெயர் தீமையை நீக்கி மேன்மை தருவதாயும், துன்பத்தை மாற்றி இன்பத்தைத் தருவதாகவும், இருப்பதால் மந்திர வலிமை பெற்றதாக விளங்குகிறது. நீலகண்டாய நமஹ என்பது துன்பத்தை நீக்கும் மந்திரமாகும். குறிப்பாக மரணத்தை மாற்றி ஆயுளை நீட்டிக்கச் செய்வதாகும். அப்பர் சுவாமிகள் தம்மை மாற்றுச் சமயத்தினர் இரும்புச்சங்கிலிகளால் கல்லோடு கட்டி கடலில் இட்டபோது நெல்லு நீள்வயல் நீலக்குடி அரன் நல்ல நாமம் நவிற்றி தாம் உய்ந்ததாகக் கூறுகிறார். நீலக்குடியில் வீற்றிருக்கும் சிவபெருமானின் திருநாமம் நீலகண்டீசுவரர் என்பது இங்கே எண்ணத்தக்கதாகும்.

திருஞானசம்பந்தர் அன்பர்களின் துன்பத்தை நீக்கி இன்பம் வேண்டி அருளியபோது தீண்டப் பெறா திருநீலகண்டம் என்ற மகுடமிட்ட திருப்பதிகத்தை ஓதினார் என்று வரலாறு கூறுகிறது.

ஒரு சமயம் திருஞானசம்பந்தப் பெருமான் திருச்செங்கோட்டிற்கு எழுந்தருளினார். அங்கே அவருடன் வந்த அன்பர்கள் காலநிலையால் உண்டான பனியுடன்கூடிய குளிர்காற்றும் தாக்கி சுரம் வந்து துன்பமடைந்தனர். அதை நீக்க நீலகண்ட மந்திரத்தை உள்வைத்து தீவினை தீண்டப் பெறா திருநீலகண்டம் என்று மகுடம் கொண்ட பதிகத்தை அருளிச்செய்தார். அப்பதிகம் முடியுமுன்னே அடியவர்களின் நோய் விலகி அவர்கள் இன்பம் அடைந்தனர்.

சிவபெருமான் நீலமணி கண்டனாக இருந்து வினைகளை அழிப்பதால், அவரைப் போலவே நீலமணியை கழுத்தில் அணிந்தால் தீமைகள் அணுகாது என்ற நம்பிக்கை நிலவுகிறது, அதையொட்டி கழுத்தில் அணியும் வழக்கம் நெடுங்காலமாக உள்ளது. கழுத்தை ஒட்டி அணிவதால் அது நீலகண்டிகை (கண்டத்தை ஒட்டி இருப்பது) எனப்பட்டது. உருத்திராட்சத்தைக் கண்டத்தோடு ஒட்டி அணிவதால் அதற்கும் கண்டிகை என்பது பெயராயிற்று.

மணியணிந்த கழுத்தைச் சிறப்பித்து மக்கள் மணிகண்டன் என்ற பெயரைச் சூடினர். சபரி மலையில் வீற்றிருக்கும் சுவாமி ஐயப்பனுக்கு மணிகண்டன் என்பதும் பெயராகும். சிவபெருமான் நீலகண்டன் என்று பெயர் பெற்றிருப்பது போலவே ஊரைக் காக்கும் சில தெய்வங்களுக்கு நீலகண்டியம்மன் என்ற பெயர் வழங்குகிறது.

கொங்கு நாட்டில் தென்கீரனூரில் இருக்கும் நீலகண்டியம்மன் ஆலயம் புகழ் பெற்றதாகும். சிவபெருமான் நீலகண்டனாக இருப்பதால் அம்பிகை நீலகண்டி என்று அழைக்கப்படுகிறாள்.

தமிழில் உள்ள ஐம்பெரும் காப்பியங்களும் சிலம்பு, மேகலை, குண்டலம், வளை, சிந்தாமணி என்ற அணிகளின் பெயரால் முறையே சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவகசிந்தாமணி எனப் பெயர் பெற்றிருப்பது இங்கே சிந்திப்பதற்குரியதாகும்.

தொகுப்பு: ஆட்சிலிங்கம்

Related Stories: