மேற்குத்தொடர்ச்சி மலையில் வசிக்கும் பழங்குடியின பெண்களில் சிலர் கற்பழித்து கொல்லப்படுகின்றனர். அந்த குற்றவாளிகளை கண்டுபிடிக்க, போலீஸ் இன்ஸ்பெக்டர் பாரதிமோகன் களத்தில் குதிக்கிறார். அதன் பிறகு என்ன என்பது மீதி கதை. சேதுபதி ஜமீன் என்ற கேரக்டராகவே மாறியுள்ள உதய் கிருஷ்ணா, ஆக்ஷன் காட்சியில் பொளந்தாலும், எல்லா காட்சியிலும் ஒரேமாதிரி முகபாவனையை வெளிப்படுத்துகிறார். போலீஸ் இன்ஸ்பெக்டர் பாரதிமோகன், தனது விசாரணையை நேர்க்கோட்டில் அணுகியுள்ளார். அமைச்சரிடம் ‘கெத்து’ காட்டியிருக்கிறார்.
பழங்குடியின பெண் தென்றல் மற்றும் குஷி, சைலஜா, மருது செழியன், ஆனந்த் பாபு, மீசை ராஜேந்திரன், அனந்தகோடி சுப்பிரமணியம், ஆடிட்டர் பாஸ்கர், கண்டாங்கிபட்டி ரவிராஜன், காஞ்சி சேகர் ஆகியோர் இயல்பாக நடித்துள்ளனர். சந்திரன் சாமியின் கேமரா வொர்க் கச்சிதம். கிருஷ் சிவாவின் பின்னணி இசை, சிறப்பு. எழுதி இசை அமைத்து இயக்கிய பாரதிமோகன், 700 ஆண்டுகளுக்கு முன்பு பவானி, நொய்யல் ஆறுகளை இணைக்கும் பாசன கால்வாய் வெட்டிய காலிங்கராயனை பெருமைப்படுத்தி இருக்கிறார். சில ஆன்மிக மோசடிகளை தோலுரித்து காட்டியுள்ளார். கவர்ச்சி பாடல் தேவையற்ற திணிப்பு.