சென்னை: நடிகர் ரவிக்குமார் சென்னையில் நேற்று காலமானார். கேரளாவை சேர்ந்தவர் நடிகர் ‘அவர்கள்’ ரவிக்குமார் (71). இவர் 70-களில் பல மலையாள படங்களில் ஹீரோவாக நடித்திருந்தார். ‘உல்லாச யாத்ரா’ என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர், தமிழிலும் சில படங்களில் ஹீரோவாக நடித்திருக்கிறார். பாலசந்தர் இயக்கிய ‘அவர்கள்’ படத்தில் இவர் 2வது ஹீரோவாக நடித்திருந்தார். மேலும் தமிழில் மலபார் போலீஸ், ரமணா, மாறன், விசில், சிவாஜி, வியாபாரி உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தார்.
சன் டிவியில் ஒளிபரப்பான சித்தி தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து தமிழ் ரசிகர்களிடையே அதிகம் பிரபலமானார். பல்வேறு தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வந்தார். இந்த நிலையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர், உடல்நலக் குறைவால் நேற்று காலமானார். வேளச்சேரியில் உள்ள மருத்துவமனையில் காலமானதாக அவருடைய மகன் தெரிவித்தார். ‘அவர்கள்’ ரவிக்குமாரின் மரணம் திரையுலகினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. திரையுலகை சேர்ந்த பலர் அவருக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.