சென்னை: கலா பவஸ்ரீ கிரியேஷன்ஸ் சார்பில் ஜிவிஎஸ் ராஜூ தயாரிக்க, அவினாஷ் பிரகாஷ் ஸ்கிரிப்ட் எழுதி இயக்குனராக அறிமுகமாகும் படம், ‘நாங்கள்’. திரைப்படக் கல்லூரியில் படத்தொகுப்பு, திரைக்கதை உருவாக்கம், இயக்கம் ஆகியவற்றை படித்துவிட்டு விளம்பர படங்களை இயக்கிய அவர், இப்படத்தின் ஒளிப்பதிவு, எடிட்டிங் ஆகிய பொறுப்புகளையும் ஏற்றுள்ளார். எஸ்எஸ்ஐ புரொடக்ஷன் சார்பில் எஸ்.சுப்பையா, வரும் 18ம் தேதி படத்தை வெளியிடுகிறார்.
ஏ.ஆர்.ரஹ்மான் பயிற்றுவித்த துபாயை சேர்ந்த ஃபிர்தவுஸ் ஆர்கெஸ்ட்ரா குழுவினரை பயன்படுத்தி வேத் சங்கர் சுகவனம் இசை அமைத்துள்ளார். படம் பற்றி அவினாஷ் பிரகாஷ் கூறுகையில், ‘மூன்று சிறுவர்களின் உணர்ச்சி போராட்டத்தை உணர்வுப்பூர்வமாக சொல்கின்ற படமான இது ராட்டர்டாம், மோஸ்ட்ரா சாஓ பாவ்லோ, ஜியோ மாமி, பெங்களூரு உள்பட பல சர்வதேச திரைப்பட விழாக்
களில் திரையிடப்பட்டு பாராட்டுகளையும், விருதுகளையும் பெற்றுள்ளது.
பெற்றோர் பிரிந்து வாழும் நிலையில், மிகவும் கண்டிப்பான தந்தையிடம் வளரும் 3 சிறுவர்கள், எதிர்கால வாழ்க்கையை எப்படி கற்றுக்கொள்கின்றனர் என்பது படத்தின் கதை. மிதுன்.வி, ரித்திக்.எம், நிதின்.டி ஆகிய 3 சிறுவர் களின் பெற்றோராக அப்துல் ரஃபே, பிரார்த்தனா.எஸ் நடித்துள்ளனர். முக்கிய வேடத்தில் ராக்ஸி என்ற நாய் நடித்துள்ளது. சுஜாதா நாராயணன் எழுதி சைந்தவி பாடிய ‘கனவே’ என்ற பாடல் மனதை வருடும். ஊட்டியில் லைவ் சவுண்ட் முறையில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது’ என்றார்.