திருவனந்தபுரம்: பிருத்விராஜ் சுகுமாரன் இயக்கத்தில் மோகன்லால், மஞ்சு வாரியர் நடிப்பில் வெளியான ‘எம்புரான்’ என்ற படத்தில் கோத்ரா ரயில் எரிப்பு மற்றும் குஜராத் கலவர சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், ஒன்றிய விசாரணை அமைப்புகளின் பழிவாங்கும் நடவடிக்கைகள் குறித்தும் விமர்சனம் செய்யப்பட்டிருந்தது. இதற்கு பாஜ மற்றும் சங்பரிவார் அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து இப்படத்தில் இருந்து 24 காட்சிகள் வெட்டப்பட்டு திரையிடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ‘எம்புரான்’ பட இயக்குனர், பிருத்விராஜ் சுகுமாரனுக்கு நேற்று முன்தினம் வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது. இதுவும் ெபரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு ‘கடுவா’, ‘ஜன கண மன’, ‘கோல்ட்’ ஆகிய படங்களில் நடித்ததற்காக அவர் வாங்கிய பணம் குறித்து இம்மாத இறுதிக்குள் விளக்கம் அளிக்கும்படி அந்த நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது ‘எம்புரான்’ படத்தின் மற்றொரு தயாரிப்பாளரான ஆண்டனி பெரும்பாவூருக்கும் வருமான வரித்துறை நேற்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அவர் இதற்கு முன்பு தயாரித்த ‘எம்புரான்’ என்ற படத்தின் முதல் பாகமான ‘லூசிஃபர்’, ‘மரைக்கார்: அரபிக்கடலின்டே சிம்ஹம்’ ஆகிய படங்களுக்கு செலவு செய்தது மற்றும் வருமானம் குறித்த விவரங்களை ஒரு மாதத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று அந்த நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது.