பேரரசுவின் மகள் சாய் தன்யாவை காதலிக்கும் செந்தி குமாரியின் மகன் சதாசிவம் சின்னராஜ், திருமணமான நிலையில் மனைவி சாய் தன்யாவை மகிழ்விக்க கார், பைக், செல்போன் உள்பட வீட்டுக்கு தேவையான பொருட்களை இஎம்ஐ மூலம் வாங்குகிறார். இந்நிலையில், அவர் பார்த்த வேலை பறிபோகிறது. பணம் இல்லாமல் தவிக்கும் அவரால் பொருட்களுக்கு இஎம்ஐ கட்ட முடியவில்லை. இதனால், பொருட்களை பறிமுதல் செய்ய வீட்டுக்கு வருபவர்களிடம் மோதுகிறார்.
அப்போது செந்தி குமாரி விபத்தில் சிக்கி உயிருக்கு போராடுகிறார். பிறகு என்ன நடக்கிறது என்பது மீதி கதை. முதல் படத்திலேயே முழுநீள பாடம் நடத்தி இருக்கிறார், இயக்கி நடித்துள்ள சதாசிவம் சின்னராஜ். பதற்றமின்றி நடித்து பாஸாகிறார். சாய் தன்யாவுக்கு வசனம் பேசியே சாதிக்கும் வேலை என்பதால், அவரும் அதை நன்கு புரிந்துகொண்டு நடித்துள்ளார். பேரரசு வழக்கமான அப்பாவாக வருகிறார். செந்தி குமாரி, பிளாக் பாண்டி, மாத தவணை வசூலிக்கும் ஆதவன், ஓ.ஏ.கே.சுந்தர், மனோகர் ஆகியோர் இயல்பாக நடித்துள்ளனர்.
பிரான்சிஸ் ஒளிப்பதிவு பலே. ஸ்ரீரீநாத் பிச்சை இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையில் அதிக உழைப்பு தெரிகிறது. அடுத்து இதுதான் என்பது தெரிவதால், சுவாரஸ்யம் குறைந்துவிடுகிறது. ஹைவே விபத்தில் சிக்கியவர்களுக்கு 1 லட்ச ரூபாய் வரை இலவச சிகிச்சை அளிக்கும் தமிழ்நாடு அரசு திட்டம் மற்றும் தலைக்கவசம் அணிவதன் அவசியத்தை சொன்னதற்காக இயக்குனரை பாராட்டலாம்.