குருவும் சீடனும் எப்படி இருக்க வேண்டும்?

ஸ்ரீராமானுஜ ஜெயந்தி 18 - 4 - 2021

இந்திய தத்துவ மரபில் மிக உயர்ந்த இடம் குருவிற்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. குரு - வெளிச்சம் தருபவர்; மனதின் இருட்டை விலக்குபவர்; பரமாத்மாவை உணர வைப்பவர்; ஜீவாத்மாவை கரை சேர்ப்பவர்; வைணவத்தில் குரு என்கிற சொல்லாட்சி இல்லை. அதற்குப் பதிலாக ஆச்சாரியன்  என்கின்ற சொல்லாட்சி உண்டு. ஓர் ஆசாரியர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்தப்  பாடலைச் சொல்லலாம்.

அம்பொன் அரங்கற்கும் ஆவிக்கும் அந்தரங்க சம்பந்தம் காட்டி தடை காட்டி - உம்பர்

திவம் என்னும் வாழ்வுக்கு சேர்ந்த நெறி

காட்டும் அவன் அன்றோ ஆசாரியன்.

பொதுவாக குரு சொல்லும் வாசகத்துக்கு எதிர் வாசகம் இல்லை. அவர் சொல்வதை சீடன் எதிர்கருத்து இல்லாமல் ஏற்க வேண்டும். குருவின் கட்டளைகளை எக்காரணம் கொண்டும் மீறவே கூடாது. அப்படி மீறுவது சிஷ்யனுக்கு அழகல்ல; இந்த மீறல் அவனுக்குத் துன்பத்தையும் நரகத்தையும் தரும். இந்தக் கருத்தை நாம் மேலோட்டமாகப் புரிந்து கொள்ளக் கூடாது. வரிக்கு வரி அர்த்தப்படுத்தி புரிந்து கொள்ளக்கூடாது. மிக நுட்பமாகவும் ஆழமாகவும் புரிந்து கொள்ள வேண்டும்.

குரு சிஷ்யன் இருவருடைய நோக்கமும் பரம்பொருளை நோக்கிய தேடலும், அதை நோக்கிய பயணமும் ஆத்ம ஜீவன உத்தேசமும் ஆகும்.

அழகான ஒரு சாந்தி மந்திரம்.

ஓம் சஹ நாவவது சஹ நவ் புனக்து

சஹ வீர்யம் கரவா-அவஹை

தேஜஸ்வி நவ்-அதீ-தம்-ஆஸ்து மா

விட்விச்ஸ்-ஆவஹை

ஓம் சாந்தி சாந்தி சாந்தி

எந்தவொரு கல்வியையும் ஒரு ஆச்சாரியனிடமிருந்து கற்றுக்கொள்ளும் முன்னாலும், எந்த ஒரு யாகாதி ஹோமங்களைத்  தொடங்குவதற்கு முன்னாலும் இந்த மந்திரம் சொல்லப்படுகிறது. ஆசிரியர் மாணவர் கூட்டுப் பிரார்த்தனை இது. இந்த மந்திரத்தின் உட்பொருள், ஆசிரியரும் மாணவரும் ஆகிய எங்கள் இருவரையும் கடவுள் காப்பாற்றட்டும். நம் இருவருடைய மெய் அறிவையும் வளர்க்கட்டும். ஆசிரியரும் மாணவரும் ஆகிய நாம் இருவரும் தொடர்ந்து உற்சாகத்தோடு மெய்யறிவை நோக்கிய கல்வியைக்  கற்போம். நம்முடைய கல்வியானது நமக்கு உண்மையை உணர்த்துவதாக இருக்கட்டும். எந்தவித முரண்பாடுகளுக்கும் துணை போகாமல் நாம் உண்மையைத் தேடுவோம் என்பது இந்த மந்திரத்தின் பொருள்.

இதிலிருந்து ஆசாரியனும் மாணவனும் இணைந்தே ஆன்ம பயணத்தை மேற்கொள்கிறார்கள். ஆசாரியன் மாணவனுக்குக் கல்வி கற்றுத் தருவதோடு தானும் கற்றுக் கொள்கின்றார். இந்த அடிப்படையைப் புரிந்து கொண்டால், ஆச்சாரியனை நோக்கி மாணவன் கேள்வி எழுப்புவதை புரிந்து கொள்ளமுடியும். ஆன்ம பயணத்திற்குத்  தடையோ, விரோதமோ  ஏற்படுகின்ற பொழுது, குருவைக் கேள்வி கேட்கவேண்டும். உபநிடதங்கள் எதையும் அப்படியே ஏற்றுக் கொள்ளாதே; கேள்வி கேள் என்கிறது. கேட்கும் பொழுதுதான் விடை கிடைக்கும் என்கிறது. குரு அதாவது ஆசாரியன் பதில் சொல்பவர் அல்ல; பதிலை நோக்கிச் சிந்திக்கச் செய்பவர்; கற்றுத் தருபவர் அல்ல; கற்றுக் கொள்ள வைப்பவர்.

தேடிக் கொடுப்பவர் அல்ல; தேடுவது எப்படி என்பதைச்  சொல்லிக் கொடுப்பவர். இதனால்தான் பல நேரத்தில் குருவிற்குக்  கிடைக்காத பக்குவமும் மெய்யறிவும், சீடர் களுக்குக் கிடைத்து விடுகிறது. குருவால் உய்வு பெறவேண்டிய சீடன், குருவையும் கரையேற்றும் பெருமையை பெற்று விடுகிறான். அதுதான் சுவாமி ராமானுஜரின் வாழ்வில் நடக்கிறது. தேடு - கேள்- சிந்தி - கண்டுபிடி - சொல். ஆன்மிகத்தின் அடிப்படை கட்டளைகள் இவை. அடுத்த விஷயம் ஆசாரியனின் கட்டளையை மீறக்கூடாது. இதுவும் நிபந்தனைக்கு உட்பட்டதுதான். சுயநலத்திற்காகவோ, புகழுக்காகவோ ஆசாரியனின் கட்டளையை மீறக் கூடாது. ஆனால், உலக நன்மையை உத்தேசித்து மீறலாம்.

திருக்கோட்டியூர் நம்பிகளிடம் மந்திரப்பொருளைக் கற்றுக்கொண்ட ராமாநுசர் மனத்தில் ஓர் சிந்தனை உதித்தது. இந்த அரிய ஐம்பொருளையும், அவற்றின் விளக்கங்களையும், அறியாமல், மாந்தர் தம் வாழ்நாளை வீண் நாளாகக் கழிக்கின்றார்களே என்று வருந்தினார். அவர் மனம் இளகியது. இப்பொருள்களை அறிந்து வாழ்ந்தால் மரணத்தின் பின் பேரின்ப வாழ்வு அமையுமே எனத் துணிந்தார். வாழ்வு பெற வேண்டும் என ஏங்கும் வைணவர்களை “வாருங்கள்” என அழைத்தார்.

திருக்கோட்டியூர் எம்பெருமான் சந்நதி, தெற்குக் கோபுரத்தின் அருகே, ‘‘ஓம் நமோ நாராயணாய’’ என்ற அஷ்டாக்ஷர மந்திரத்தை தாம் அறிந்த இரகசியங்களின் பொருளோடு அவர்களுக்கு உபதேசித்தார் ராமாநுசர்.

இதனையறிந்தார் திருக்கோட்டியூர் நம்பிகள். அவரை அழைத்து, “எம் ஆணையை மீறிப் பலர்க்கும் இரகசியங்களை விளக்கம் செய்தது முறையோ? நரகம் பெறுவீர் என்பதை மறந்தீரோ?” எனச் சினந்தார். “தவறுதான். அடியேனுக்கு நரகம்தான் கிடைக்கும். ஐயமில்லை. ஆனால், அடியேன் ஒருவன் நரகம் புகுந்தாலும்  கூடியிருந்து ஐம்பொருள் அறிந்து கொண்டோரெல்லாம் வீடுபேறு அடைவது திண்ணமன்றோ! அந்த ஆசையால் அறிவித்தேன்” என்று கூறினார் ராமாநுசர்.

முதலில் கோபப்பட்ட திருக்கோட்டியூர் நம்பிகள் இராமாநுசரின் நியாயமான மறுமொழி கேட்டு மனம் மகிழ்ந்தார்.

தன் கட்டளையை மீறியதற்காக அவர் சாபம் கொடுக்கவில்லை. மாறாக அவர் அனைத்துலகும் வாழப் பிறந்தவர் என்கிற உன்னத உண்மையை உலகுக்கு உணர்த்த தான் ஒரு கருவி என்று நினைத்தார். படாதபாடு பட்டு கற்றுக்கொண்ட உயர்ந்த பொருளை ஆசை உடையோர்க்கு எல்லாம் வாருங்கள் என்று பேசிய  ராமானுஜரின் செயலை விட, செயலுக்கு காரணமான உள்ளத்தைப் பார்த்தார் திருக்கோட்டியூர் நம்பிகள்  “பிறருடைய வாழ்விற்காகத் தம் வாழ்வைக் குலைத்துக் கொள்ளும் குணவானே! பொலிக பொலிக!” என வாழ்த்தினார். ஆளவந்தார் தம்மிடம் கூறிய வருங்கால வைணவ ஆசார்யர் (பவிஷ்ய ஆச்சார்யர்) இவரே என அறிந்து அவைக் கட்டி அணைத்துக் கொண்டார்.

பகவானான எம்பெருமானுக்கு இல்லாத கருணை உள்ளம் ராமானுஜருக்கு இருப்தை அறிந்து எம்பெருமானை விட இவர் சிறந்தவர் என்கிற பொருளிலே ஆர் விகுதி சேர்த்து எம்பெருமானாரே என்று அழைத்தார். “வாரீர் எம்பெருமானாரே! இன்று உம்மால் பேறு பெற்றேன்” என்றார். இன்று முதல் இந்த வைணவ தரிசனம் “எம்பெருமானார்  தரிசனம்” என்றே  வழங்கப்படட்டும் என்றார். இராமாநுஜர் எம்பெருமானார் ஆனார். பல ஆசாரியர்கள் தம் சீடர்களிடம் கேள்வி கேட்க அனுமதிப்பதில்லை. கருத்து வேறுபாடுகள் உருவாகவும், உருவாக்கவும் விரும்புவது இல்லை. ஆனால், ராமானுஜர் இதிலும் முன்னோடியாகத் திகழ்ந்தார். தம்மைக் கேள்வி கேட்க அனுமதித்தார்.

தம்மோடு கருத்து வேறுபாடு கொள்ள அனுமதித்தார். கூரத்தாழ்வானோடு இணைந்து அவர் பிரம்ம சூத்திரத்திற்கு ஸ்ரீ பாஷ்யம் எழுதியபொழுது பல கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. கூரத்தாழ்வான் ராமானுஜர் கூறிய சில அர்த்தத்தை ஏற்கவில்லை. எழுதுவதை நிறுத்திவிட்டு இந்தப் பொருள் பொருந்தாது என்று வாதிட்டார். இதனால் சில நேரங்களில் ஆசாரியரிடம் தண்டனையையும் மகிழ்ச்சியோடு ஏற்றார். ஆனால், ஆசாரியன் கருத்தை ஏற்கவில்லை. கடைசியில் ஆசாரியன் சிந்தித்துப் பார்த்துவிட்டு கூரத்தாழ்வான் கருத்தை ஏற்று, “ஆம். நீ சொன்னது தான் சரி” என்று சொன்ன பிறகு தான், ஸ்ரீ பாஷ்யத்தைத் தொடர்ந்தார்.

இப்படி குரு என்கிற ஸ்தானத்தின் உன்னதத்தை உலகுக்கு உணர்த்தியவர் ஸ்ரீ ராமானுஜர்.

Related Stories: